இந்திய அணியில் கோஷ்டி மோதல்


 ""இந்திய அணியில் பிளவை ஏற்படுத்துகிறார் சேவக். இரண்டு கோஷ்டிகளாக இந்திய வீரர்கள் செயல்படுகின்றனர்,''என, ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து வீரர்கள் விரக்தியில் உள்ளனர்.
ஆஸி., "மீடியா' சதி:
இந்நிலையில், மனரீதியாக இந்திய அணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஆஸ்திரேலியா முயற்சிக்கிறது. சேவக், தோனிக்கு ஆதரவாக இரு கோஷ்டியாக வீரர்கள் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. இது உண்மையா அல்லது ஆஸ்திரேலிய "மீடியா'வின் சதியா என்பது போகப் போகத் தான் தெரியும்.
இது குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் "ஹெரால்டு சன்' பத்திரிகை வெளியிட்ட செய்தி:
இந்திய அணியில் சேவக் தான் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இவர் அணியில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இந்திய வீரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர். அவர்களிடம் ஒற்றுமை காணப்படவில்லை.
யார் கேப்டன்:
இந்திய அணியை வழிநடத்திச் செல்வது யார் என்பதில் குழப்பம் காணப்படுகிறது. சிலர் துணை கேப்டன் சேவக்கிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். சமீப காலமாக தோனி சொதப்புகிறார். இவரிடம் போராடும் குணம் குறைந்து விட்டது. சிட்னி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 2 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றியதாக, சேவக் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இன்னொரு பிரிவினர் கேப்டன் பதவியில் தோனியே நீடிக்க வேண்டுமென விரும்புகின்றனர்.
சீனியர், ஜூனியர் வீரர்கள் என்ற வேறுபாடும் காணப்படுகிறது. பொருளாதார ரீதியாக இவர்களுக்குள் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளது போல, அணியின் முக்கிய கூட்டங்களில் சீனியர் வீரர்கள் முன் பேசுவதற்கு இளம் வீரர்கள் அஞ்சுகின்றனர்.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலிய வீரர்களும் தங்கள் பங்கிற்கு இந்திய அணியை விமர்சித்துள்ளனர். ரியான் ஹாரிஸ் கூறுகையில்,""இரண்டு தோல்விகள் இந்திய வீரர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கும் சண்டையிட்டு கொள்கின்றனர்,''என்றார்.
பி.சி.சி.ஐ., ஆவேசம்
ஆஸ்திரேலிய பத்திரிகை செய்திக்கு இந்திய கிரிக்கெட் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""ஆஸ்திரேலிய பத்திரிகையில் வெளியான செய்தி முட்டாள்தனமானது. தங்கள் இஷ்டத்திற்கு எழுதுகின்றனர். கேப்டன் மற்றும் துணை கேப்டன் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை,''என்றார். 

Post a Comment

0 Comments