பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் உதவித் தொகை


தொடக்கப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமிக்க பட்டதாரி மாணவர்களுக்கு காந்தி ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது. மாணவர்களிடம் சமூக அக்கறையையும் தலைமைப் பண்பையும் வளர்க்க உதவும் இந்த ஃபெல்லோஷிப் பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் முதலில் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய காந்திஜியின் பெயரால் காந்தி ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது. நாட்டில் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கில் இந்த ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது. கைவல்யா எஜுக்கேஷன் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் இந்த ஃபெல்லோஷிப்பை வழங்குகிறது. அஜய் பிரமல் ஃபவுண்டேஷன் அமைப்பு இத்திட்டத்திற்கான நிதியை வழங்குகிறது. இந்த ஃபெல்லோஷிப் பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த ஃபெல்லோஷிப் பெற தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள், தொடக்கப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட்டு பள்ளியின் வளர்ச்சியில் ஈடுபட வேண்டியதிருக்கும். பள்ளியின் தரத்தைப் பேணுவதில் ஏற்படும்

சவால்களை எதிர்கொண்டு தீர்வு காண வேண்டியதிருக்கும். இந்த ஃபெல்லோஷிப் காலம் இரண்டு ஆண்டுகளாகும். இந்த ஃபெல்லோஷிப் வித்தியாசமானது. அறைக்குள் அமர்ந்து படித்து ஆய்வு செய்வது போன்றது அல்ல இந்தப் பணி. மாணவர்கள் தங்களது திறமைகளைப் பயன்படுத்திச் செயல்பட வேண்டும். கிராமப்புறங்களில் அல்லது நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் களப்பணி செய்ய வேண்டியதிருக்கும். பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து அவர்களது பணிக்குத் துணை சேர்க்கும் வகையில் இந்த ஃபெல்லோஷிப் பெறும் மாணவர்களின் பணி இருக்கும். இந்தப் பணியில் ஈடுபடும் அதே வேளையில் மாணவர்களும் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். அதற்கேற்ற வகையில் பாடத்திட்டமும் செயல்முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள், பள்ளிகளில் எந்த மாதிரியான பணிகளில் ஈடுபட வேண்டியதிருக்கும், அவர்களது கடமைகள் என்ன என்பது குறித்து ஆறு வார பயிற்சி அளிக்கப்படும். அத்துடன், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பல்வேறு அமைப்புகளுக்குச் சென்று அங்குள்ள நிபுணர்களிடம் கலந்து பேசி பல்வேறு விவரங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். இந்த ஃபெல்லோஷிப் பெறும் மாணவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள், 5 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதிருக்கும். செயல்பாடுகள் குறித்த பரிசீலனை மற்றும் திட்டமிடலுக்கு ஒரு நாள். இந்த ஃபெல்லோஷிப் பெறும் மாணவர்களுக்கு நிபுணர்கள் வழங்கும் விரிவுரை மற்றும் கலந்துரையாடலுக்கு ஒரு நாள். கூட்டுச் செயல்பாடு மற்றும் ஓய்வுக்கு ஒரு நாள். இப்படி, ஒரு வாரப் பணி இருக்கும். பள்ளி வேலைநாட்களையொட்டி இவர்களது பணி நிர்ணயிக்கப்படும். தீபாவளியையொட்டி ஒரு வாரமும் கோடையில் ஒரு வாரமும் விடுமுறை இருக்கும். அத்துடன், பல்வேறு இடங்களுக்கும் சென்று வர வேண்டியதிருக்கும்.  அதாவது, மாணவர்கள் இந்தக் கல்விப் பணியில் ஈடுபட்டிருக்கும்போதே அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதுதான் இதன் முக்கிய அம்சம். இந்த ஃபெல்லோஷிப் பெறும் மாணவர்களுக்கு கைவல்யா எஜுக்கேஷன் ஃபவுண்டேஷன் திட்டத்தைச் சேர்ந்தவர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து தங்கும் இடம் வசதியும் செய்து தரப்படும் என்பதால் கருத்துப் பகிர்வுக்கு இது உதவியாக இருக்கும்.

இந்த இரண்டு காலத்தில், ஃபெல்லோஷிப் பெற்ற மாணவர்கள் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். மாற்றங்களை ஏற்படுத்தும் திறமைகள் அவர்களிடம் நிச்சயம் உருவாகி இருக்கும். எனவே, அவர்கள் அரசுத் துறைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில் பணி, பத்திரிகையாளர், ஆசிரியர் பணி...இப்படி எந்தப் பணியிலும் அவர்களால் மிளிர முடியும். இந்த ஃபெல்லோஷிப் பெற்ற மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் முடிவில் எந்த வேலைக்கும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஃபெல்லோஷிப் முடித்த மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. 2010ம் ஆண்டு ஃபெல்லோஷிப்பை முடித்தவர்களுக்கு ஜெர்மன் டெவலப்மெண்ட் ஆர்கனைசே ஷன், யுவ பிரிவர்தன், நவாதன்யா, கைவல்யா எஜுக்கேஷன் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைப்புகளில் வேலை கிடைத்துள்ளன.

சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள விரும்பும் பட்டதாரி இளைஞரா நீங்கள்? இந்த ஃபெல்லோஷிப் கோரி விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. டிசம்பர் மாத இறுதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியுடைய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அதில் திறமையான மாணவர்கள் இந்த காந்தி ஃபெல்லோஷிப் பெற தேர்வு செய்யப்படுவார்கள். தகுதிகள் மற்றும் இந்த ஃபெல்லோஷிப் குறித்த விவரங்களுக்கு இதன் இணைய தளத்தைப் பார்க்கவும்.
*******************************************************

விவரங்களுக்கு:

www.gandhifellowship.org

***************************************

Post a Comment

0 Comments