உலகம் முழுதும் இன்று இணையதளத்தை முடக்க சதி

உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை இன்று முடக்க இருப்பதாக சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார்.

சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டு பேசியதாவது:

இணையதளங்களில் "அனானிமஸ்' (அநாமதேயம்) என்ற பெயருடன் ஒருவித தாக்குதலை நடத்த சர்வதேச சைபர் குற்றவாளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக என்னை எச்சரித்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இண்டர்போலுக்கு சவால் விடும் வகையில் எனது தந்தை குறித்த விவரங்கள், வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றையும் அவர்கள் இணையம் வாயிலாக இடைமறித்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் நோக்கம் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை அரை நாளாவது வரையாவது முடக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளுக்கு இழப்பு ஏற்பட வேண்டும் என்பதுதான். இதற்காக அவர்கள் இலக்கு வைத்துள்ள நாள் மார்ச் 31, 2012.

உலகம் முழுதும் 31 பேர் கைது:

யார் இந்த சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்.

இந்தக் குழுக்கள் கொலம்பியா, சிலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் 31 பேர் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் பிளாக் அவுட்

"ஆபரேஷன் பிளாக் அவுட்' அவர்களிடம் விசாரணை நடத்தியதில், "ஆபரேஷன் பிளாக் அவுட்' என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சி மேற்கொள்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் சைபர் குற்றங்களை முறியடிக்க தனியொரு நாடால் முடியாது. உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும்.

போலி பாஸ்போர்ட்

வெளிநாடுகளுக்குப் பயங்கரவாதிகள் போலி பாஸ்போர்ட் மூலம் சர்வ சாதாரணமாக செல்கிறார்கள். அதை முறியடிக்கும் வகையில் 150 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் தகவல்களை இண்டர்போல் அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. அதன் உதவியுடன்தான், 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வந்த சர்வதேச பார்வையாளர்களின் பாஸ்போர்ட் சரிபார்க்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் யாராவது குற்றம் செய்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றால் அவருக்கு எதிராக தேடுதல் வாரண்ட் பிறப்பிக்கப்படும். அந்த வாரண்ட் ஐரோப்பிய நாடுகள் முழுமைக்கும் பொதுவாக இருக்கும். அதனால், அங்கு வேறு நாட்டில் உள்ளவரைக் கைது செய்வதில் பிரச்னை இருக்காது.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மற்ற நாடுகளில் இண்டர்போல் மூலம் 'ரெட் கார்னர்" நோட்டீஸ் வெளியிடப்படும். அதன்படி, சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் கருதப்படுவார். ஆனால், அவர்களைக் கண்டுபிடிப்பதும் சட்ட நடவடிக்கை எடுப்பதும் கடினம்.

இந்த நிலை மாற வேண்டுமானால், இண்டர்போல் உறுப்பு நாடுகளுக்குள் பரஸ்பர சட்ட நடைமுறைகளை எளிமையாக்கி குற்றவாளிகளைக் கைது செய்யும் வசதிகளை ஏற்படுத்தவேண்டும்," என்றார் ரொனால்டு கே. நோபல்.

Post a Comment

0 Comments