விடைபெற்றார் "பெருஞ்சுவர்' டிராவிட்


""சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது கவலை அளிக்கிறது. ஆனால், இந்திய அணிக்காக கிரிக்கெட் <<உணர்வுடன் விளையாடியது மிகவும் பெருமையாக உள்ளது,''என்ற வார்த்தைகளுடன் பிரியாவிடைபெற்றார் இந்திய "பெருஞ்சுவர்' டிராவிட். 
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட், 38. கடந்த 1996ல் அறிமுகமானார். பேட்டிங் நுணுக்கத்தில் கைதேர்ந்த இவர், களத்தில் தூணாக நின்று அணியை மீட்பதில் வல்லவராக திகழ்ந்தார். இவரது தற்காப்பு ஆட்டத்தை எதிரணி பவுலர்களால் எளிதில் தகர்க்க முடியாது. இதன் காரணமாக அணியின் "பெருஞ்சுவர்' என போற்றப்பட்டார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். பின் டெஸ்டில் மட்டும் பங்கேற்று வந்தார்.
சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பினார். அடுத்தடுத்து "போல்டாக' இவரது பேட்டிங் திறன் குறித்து கேள்வி எழுவியது. இதையடுத்து ஓய்வு பெறும் முடிவுக்கு தள்ளப்பட்டார். நேற்று முறைப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற டிராவிட் கூறியது:
இந்திய அணிக்காக பங்கேற்ற நாட்கள் கனவு போல இருந்தது. மிகநீண்ட இந்த பயணத்தை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்த அணியில் நானும் இருந்தேன் என்பது அதிர்ஷ்டம் தான். எனது சகவீரர்கள் பலர் உலகளவில் சாதனையாளர்களாக இருந்தனர். இவர்களிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். இந்த வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். 
16 ஆண்டுகள்:
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்கத் துவங்கி, 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது இவற்றில் இருந்து விடைபெற நேரம் வந்து விட்டது. இதற்காக வருந்தவில்லை. இனி அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள், அணியை முன்னெடுத்துச் செல்வர். இந்த இளம் வீரர்களுக்கு வழிவிட்டு, அணியில் இருந்து ஓய்வு பெற இது தான் சரியான தருணம். 
கடந்த ஒரு ஆண்டு காலமாகவே, ஒவ்வொரு தொடரின் போதும் இது குறித்து சிந்தித்து வந்தேன். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியதும், தீவிரமாக யோசித்தேன். பின் சச்சின் மற்றும் சக வீரர்களிடம் பேசி இம்முடிவை எடுத்தேன். மற்றபடி, ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங்கில் ஏமாற்றியதால், இம்முடிவுக்கு வரவில்லை. 
ரசிகர்களுக்கு நன்றி:
சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் முதல்தர போட்டிகள் அனைத்தில் இருந்தும் இப்போது விடைபெறுகிறேன். இத்துடன் இனிமையான நினைவுகளையும், நல்ல நண்பர்களையும் விட்டுச் செல்கிறேன். இந்த காலத்தை திரும்பிப் பார்த்தால், நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். அணியில் பல்வேறு கேப்டன்கள் கீழ் விளையாடியுள்ளேன். இவர்கள் எனக்கு தேவையான ஆலோசனை வழங்கி, என்னைக் கவர்ந்தனர். மொத்தத்தில் என்னுடன் விளையாடிய அணி வீரர்கள் அனைவருக்கும் நன்றி. கடைசியாக எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் நன்றி. சொந்த மண்ணிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, இந்தியாவுக்காகவும், ரசிகர்கள் சார்பாகவும், உங்கள் முன் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம் தான். 
விடாமுயற்சி:
 கிரிக்கெட்டில் எனது அணுகுமுறை மிகவும் எளிதானது. இந்திய அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும். கிரிக்கெட் உணர்வை காப்பாற்ற வேண்டும். இதன்படி விளையாடி உள்ளேன் என நம்புகிறேன். சில நேரங்களில் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனாலும், எனது முயற்சியை ஒருபோதும் நிறுத்தியது இல்லை. இதன் காரணமாக கவலை கலந்த பெருமையுடன், கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன். 
இவ்வாறு டிராவிட் கூறினார்.
டிராவிட் ஓய்வு கவலை தந்தாலும், அவர் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ள சாதனைகளை நினைத்து, ஒவ்வொரு இந்திய ரசிகரும் நிச்சயமாக பெருமைப்படலாம். 

முதல் வீரர்
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் வீரர் இந்தியாவின் டிராவிட் தான்.
* பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி, 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் இவர் தான்.

இரண்டாவது இடம்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில், டிராவிட் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள் 

விவரம்:
வீரர்/அணி போட்டி ரன் 100/50
சச்சின் (இந்தியா) 188 15,470 51/65
டிராவிட் (இந்தியா) 164 13,288 36/63
பாண்டிங் (ஆஸி.,) 162 13,200 41/61
* 344 ஒருநாள் போட்டிகளில், 12 சதங்கள் உட்பட, 10,889 ரன்கள் எடுத்த இவர், உலகளவில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஏழாவது இடத்திலுள்ளார். 

நான்கு சதங்கள்
கடந்த 2002ல் இங்கிலாந்துக்கு எதிராக (115, 148, 217) மூன்று, வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக ஒன்று (100) என, தொடர்ச்சியாக நான்கு இன்னிங்சில் டெஸ்ட் சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் டிராவிட் தான். 

பிராட்மேனுக்கு அடுத்து...
தொடர்ந்து மூன்று தொடர்களில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் வரிசையில், ஆஸ்திரேலியாவின் பிராட்மேனுக்கு அடுத்து இரண்டாவது இடம் டிராவிட்டுக்குத் தான். நியூசிலாந்து (222, ஆமதாபாத்), ஆஸ்திரேலியா (233, அடிலெய்டு), பாகிஸ்தான் (270, ராவல்பிண்டி) அணிகளுக்கு, எதிராக 2003-04ல் இந்த சாதனை படைத்துள்ளார்.

35 ஆண்டுக்குப்பின்...
டிராவிட் தலைமையிலான அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில், 35 ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக 2006ல் டெஸ்ட் தொடரை வென்றது.
* இவரது அணி இங்கிலாந்தில் 21 ஆண்டுக்குப் பின், முதன் முறையாக 2007ல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

அன்னிய மண்ணில் அசத்தல்
டிராவிட் அன்னிய மண்ணில் பங்கேற்ற 93 டெஸ்டில், இந்திய அணி 15ல் வெற்றி, 32 ல் "டிரா' செய்தது. இந்த 15 போட்டிகளில் டிராவிட் 4 சதம், 7 அரைசதம் உட்பட 1577 ரன்கள் எடுத்தார். அடுத்த இடத்தில் லட்சுமண் (14 வெற்றி, 1111 ரன்கள்), சச்சின் (13, 1219 ரன்கள்) உள்ளனர்.

 "கீப்பர்' டிராவிட்
இந்திய அணியில் துவக்க வீரர், 3வது இடம் அல்லது 4 என, எந்த இடத்தில் களமிறங்குமாறு நிர்வாகம் கூறினாலும், அந்த இடத்தில் தனது பணியை சரியாக நிறைவேற்றினார் டிராவிட். ஒருகட்டத்தில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு அசத்தினார். பின் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினார்.

1
ஆன்டிகுவா டெஸ்டில்(2002) பவுலிங் செய்த டிராவிட், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேக்கப்சை அவுட்டாக்கினார். இதுதான் டெஸ்டில் இவர் கைப்பற்றிய ஒரே விக்கெட். 

11 
டெஸ்ட் போட்டிகளில் வென்ற 11 ஆட்டநாயகன் விருதுகளில், 8 அன்னிய மண்ணில் (93 டெஸ்ட்) கிடைத்தது. இந்தியாவின் சச்சின் 14 முறை வென்றிருந்தாலும், அன்னிய மண்ணில் 6 முறை தான் இப்பெருமை பெற்றுள்ளார்.

31
இங்கிலாந்துக்கு எதிராக, கடந்த 2011 ஆகஸ்ட் மாதம், தனது முதல் "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்ற டிராவிட் 31 ரன்கள் எடுத்தார். இப்போட்டியுடன் "டுவென்டி-20' கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

88
தனது டெஸ்ட் வரலாற்றில் 88 முறை மற்றவர்களுடன் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். சச்சினுடன் 20, லட்சுமணுடன் 12, சேவக், கங்குலியுடன் 10 முறை இந்த இலக்கை எட்டினார்.

95
சர்வதேச டெஸ்ட் அரங்கில், கடந்த 1996ல் முதன் முதலாக காலடி வைத்த இவர், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 95 ரன்கள் எடுத்து முத்திரை பதித்தார்.

173
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில், 2000 முதல் 2004 வரையில், தொடர்ச்சியாக 173 இன்னிங்சில், "டக்' அவுட்டாகாத உலகின் ஒரே வீரர் டிராவிட் தான். 1999 முதல் 2004 வரை 120 ஒருநாள் போட்டிகளில் "டக்' அவுட்டாகாமல் இருந்தார்.

210
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக "கேட்ச்' பிடித்த வீரர்கள் வரிசையில் டிராவிட், முதலிடத்தில் (210) உள்ளார். இவருக்கு அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (193), இலங்கையின் ஜெயவர்தனா (181) உள்ளனர்.

270
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2004ல் ராவல்பிண்டியில் நடந்த டெஸ்டில், 270 ரன்கள் எடுத்தது தான், டிராவிட் எடுத்த அதிகபட்ச டெஸ்ட் ரன். இப்போட்டியில் இந்திய அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

410
பாகிஸ்தானுக்கு எதிரான லாகூர் டெஸ்டில் (2005-06), இந்திய வீரர் சேவக்குடன் இணைந்து, முதல் விக்கெட்டுக்கு 410 ரன்கள் சேர்த்தார். டிராவிட் "பார்ட்னர்ஷிப்பில்' எடுக்கப்பட்ட அதிக ரன் இது தான்.

461
இங்கிலாந்தில் 1999ல் நடந்த உலக கோப்பை தொடரில், இந்திய அணியின் டிராவிட் 461 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.

1357
2002 ம் ஆண்டு டிராவிட்டுக்கு சிறப்பானதாக அமைந்தது. இந்த ஆண்டு பங்கேற்ற 16 டெஸ்டில், 26 இன்னிங்சில் களமிறங்கிய டிராவிட், 1357 ரன்கள் எடுத்தார். 16 ஆண்டுகால வரலாற்றில், ஒரு ஆண்டில் எடுத்த அதிக ரன்கள் இது தான்.

31,258
நிதானமாக ஆடும் டிராவிட், டெஸ்ட் அரங்கில் 31 ஆயிரத்து, 258 பந்துகளை சந்தித்த, உலகின் ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர். 

சாம்பியன் வீரர் டிராவிட்: பிரபலங்கள் புகழாரம்
பெங்களூரு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிராவிட்டை, கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். 
அஜித் வடேகர் (முன்னாள் இந்திய கேப்டன்):
 மீண்டும் ஒரு முறை சீனப் பெருஞ்சுவரை உருவாக்க முடியாது. இதே போல இன்னொரு டிராவிட் கிடைப்பது அரிது. இவரது ஓய்வால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது கடினம். 

கவாஸ்கர்(முன்னாள் இந்திய கேப்டன்)
வீரர்கள் 35 வயதை கடக்கும் போதே ஓய்வு எண்ணம் மனதில் தோன்றி விடும். எனவே, டிராவிட் ஓய்வில் வியப்பு இல்லை. இவருக்கு நிகரான வீரரை கண்டறிவது கடினம். நிறைய இளம் வீரர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் புதிய "ஹீரோ'வை இந்திய ரசிகர்கள் தேட வேண்டும். இது விளையாட்டில் சகஜம்.

ஹர்பஜன்(இந்திய வீரர்):
எனது பந்துவீச்சில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் கொடுத்த "கேட்ச்சை' டிராவிட் பிடித்ததை மறக்க முடியாது. இது அவரது 200வது "கேட்ச்சாக' அமைந்தது. அணியின் வீரர்களுக்கு ஊக்க சக்தியாக இருந்தார். ஒவ்வொரு போட்டிக்கும் எப்படி தயாராக வேண்டும் என்பதை இவரிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

சேவக்(இந்திய வீரர்): டிராவிட்டுடன் இணைந்து விளையாடியதை மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன். அணிக்கு தன்னம்பிக்கை அளித்தவர். வரும் போட்டிகளில் இவரை "மிஸ்' பண்ணுவோம்.

மைக்கேல் வான்(முன்னாள் இங்கிலாந்து கேப்டன்): கடந்த 20 ஆண்டுகளில் உலகம் மதித்த கிரிக்கெட் வீரர்களில் டிராவிட்டும் ஒருவர். 

மகேஷ் பூபதி(இந்திய டென்னிஸ் வீரர்): களத்திலும், அதற்கு வெளியேயும் சாம்பியன் வீரராக திகழ்ந்தார் டிராவிட். கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஒழுக்கம் இருந்தால், வானமே எல்லை என்பதை எங்களுக்கு உணர்த்தினார். ஓய்வுக்கு பின் சிறப்பான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

கங்குலி(முன்னாள் இந்திய கேப்டன்): இங்கிலாந்து தொடர் முடிந்த கையோடு டிராவிட் ஓய்வு பெற்றிருக்கலாம். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது சரியான முடிவை எடுத்திருக்கிறார். இதன் மூலம் அணியில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை தேர்வாளர்களுக்கு உணர்த்தியுள்ளார்.

Post a Comment

0 Comments