டிராவிடை நான் மிஸ் பண்ணப் போகிறேன் - சச்சின்.

ராகுல் டிராவிட் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை எங்குமே பார்க்க முடியாது. அப்படி ஒரு வீரர் இனியும் கூட கிடைக்க மாட்டார் என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளிலிருந்து விடை பெற்று விட்ட டிராவிட் இன்று டெஸ்ட் போட்டிகளிலும் தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் சச்சின் டிராவிடைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், டிராவிடைப் போல வேறு ஒரு வீரர் கிடையாது. அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதும் சரி, டிராவிடுக்கு நிகர் டிராவிட் மட்டுமே. அவரைப் போல இன்னொருவர் வர முடியாது. ஆட்டக்களத்திலும் சரி, டிரஸ்ஸிங் ரூமிலும் சரி டிராவிடை நான் மிஸ் பண்ணப் போகிறேன் என்று கூறியுள்ளார் சச்சின்.

டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த நம்பர் டூ வீரர் டிராவிட்தான். முதலிடத்தில் சச்சின் உட்கார்ந்திருக்கிறார். இன்று பெங்களூரில் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு டிராவிட் ஏற்பாடு செய்துள்ளார். அப்போது தனது ஓய்வு முடிவை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் தொடங்கிய டிராவிடின் கிரிக்கெட் பயணம் கடந்த 15 வருடங்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. கேப்டனாக இருந்தது இவரது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம். அதன் பின்னர் பார்ம் பிரச்சினை வந்தது. இதனால் தடுமாற்றத்துடன் போய்க் கொண்டிருந்த கிரிக்கெட் வாழ்க்கையில், ஒரு நாள் போட்டிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

முற்றுப் புள்ளி வைப்பதற்கு முன்பு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின்போது டிராவிட் மட்டுமே பளிச்சென பிரகாசித்தார். சச்சின் உள்ளிட்ட மற்ற அனைவருமே தோல்வி முகத்தில் இருந்தனர். டிராவிட் மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினார்.

சச்சினும் சரி, டிராவிடும் சரி, இருவரும் இணைந்து இந்தியாவுக்கு எத்தனையோ அற்புதமான வெற்றிகளைக் கொடுத்துள்ளனர். இருவரும் சேர்ந்து இந்திய அணிக்கு பல பெருமைகளையும் தேடிக் கொடுத்துள்ளனர். தற்போது அதில் ஒரு விக்கெட் விழப் போகிறது.
  டிராவிடுடன் இணைந்து ஆடியது குறித்து சச்சின் கூறுகையில், டிராவிடுடன் பல சிறந்த தருணங்களை நான் அனுபவித்துள்ளேன். எங்களது பல செஞ்சுரி பார்ட்னர்ஷிப்புகளே அதற்குச் சான்று. இருவரும் இணைந்து நடுக்களத்தில் நீண்ட நேரம் நின்று ஆடியுள்ளோம்.

164 போட்டிகள், 13,000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த ஒருவரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. எந்த வகையான பாராட்டும் அவருக்குப் போதுமானதாக இருக்காது என்றார் சச்சின்.

சச்சினுக்கு எப்படியோ, நிச்சயம் இந்திய டெஸ்ட் அணிக்கு டிராவிடன் ஓய்வு பெரும் இழப்பு என்பதில் சந்தேகமில்லை. காரணம், டிராவிடைப் போன்ற ஒரு ஸ்திரமான, சிறப்பான மாற்று நடுக்கள வீரரை இன்னும் நாம் சரிவர கண்டுபிடிக்கவில்லை.

Post a Comment

1 Comments

என் Friend-ப் போல யாரு மச்சான் ? - SACHIN !