என்ஜினீயரிங் பொது நுழைவு தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு


என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
தேசிய அளவில் நடக்கும் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டத்தில் இணைய ஏற்கனவே தமிழக அரசு மறுத்து விட்டது. பொது நுழைவுத் தேர்வை கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
 
உயர் கல்வி சேர்க்கையில் உள்ள பலவகையான நடைமுறைகளை களைந்து தேசிய அளவில் ஒரே பொது நுழைவுத் தேர்வின் கீழ் தொழிற் கல்வி சேர்க்கையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் ராமசாமி கமிட்டி ஆய்வு செய்து தேசிய அளவில் ஒரே பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என பரிந்துரைத்தது.
 
இதைத் தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ராமசாமி கமிட்டி அளித்துள்ள பரிந்துரையில், பொது நுழைவுத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதை ஏற்று இந்திய அறிவியல்- பொறியியல் தகுதித் தேர்வு (ஐ.எஸ்.இ.இ.டி.) என்ற ஒரே பொதுத் தேர்வை அடுத்த ஆண்டு முதல் நடத்த திட்டமிட்டுள்ளது.  
 
மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு மாநில அரசுகளின் கருத்தை கேட்க 22-ந்தேதி டெல்லியில் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை மத்திய அரசு கூட்டியுள்ளது. இதில் மாநில கல்வி அமைச்சர்களின் ஒருமித்த கருத்துக்களை பெற்று, பொது நுழைவுத் தேர்வை இறுதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
இந்த மாநாட்டில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் கலந்து கொண்டு மத்திய அரசின் பொது நுழைவு தேர்வு முடிவுக்கு எதிர்ப்பை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை கவர்னர் உரையில் தொழில் கல்வி மாணவர் சேர்க்கையில் எந்த நுழைவு தேர்வை கொண்டு வந்தாலும் அதை தமிழக அரசு எதிர்க்கும் என்று வலியுறுத்தியுள்ளது.
 
அதனால் இதில் அரசின் கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. அதே நிலையே வலியுறுத்துவோம் என்று உயர் கல்வித்துறை செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments