ஆஸி அணியை வென்றது இலங்கை


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது ஆட்டத்தில் இலங்கை அணி ஆஸி அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
ஹோபர்ட் நகரின் பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸி அணி தமது 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி ஆட்டம் முடிவடைய நான்கு பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்த வெற்றியை பெற்றது. இலங்கை அணியின் தலைவர் மஹேள ஜெயவர்தனவும், தினேஷ் சண்டிமலும் சிறப்பாக ஆடி இலங்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் பீட்டார் ஃபாரஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தை இந்த ஆட்டத்தில் அடித்தார். அவர் எடுத்த ஓட்டங்கள் 104.
இப்போட்டியில் வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற நிலை கடைசி ஓவர் வரை நீடித்தது.
இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிகளுடன் இலங்கை முதலிடத்திலும், ஆஸி அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.
தொடரில் பங்கேற்கும் மற்றொரு அணியான இந்தியா 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று அணிகளும் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளன.
இந்தப் போட்டித் தொடரில் இன்னமும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளன. அனைத்து அணிகளும் இருபோட்டிகளில் விளையாடும்.எனினும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணி தாங்கள் ஆடவுள்ள இரு போட்டிகளில் ஒன்றில் வென்றாலே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால் இந்திய அணியோ இனி ஆட வேண்டிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
எதிர்வரும் ஞாயிறன்று, அதாவது இம்மாதம் 26 ஆம் தேதி சிட்னியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளும், செவ்வாய்கிழமை 28 ஆம் தேதி ஹோபர்ட்டில் இந்திய இலங்கை அணிகளும் மோதுகின்றன.
இப்போட்டியில் தகுதிச் சுற்றின் கடைசி ஆட்டம் மெல்பர்ண் நகரில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு பிறகு மூன்று இறுதி ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதில் முதல் போட்டி பிரிஸ்பேனிலுள்ள காபா மைதானத்திலும் அடுத்த இரு ஆட்டங்களும் அடிலைட் ஓவல் மைதானத்திலும் இடம்பெறுகின்றன.
இறுதிப் போட்டிகள் மார்ச் மாதம் 4, 6 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணியின் ஆட்டம் மோசமாகவே இருந்துள்ளது என்றும் அணிக்குள்ளேயே சில முரண்பாடுகள் இருந்தன என்றும் விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியா விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து இரண்டில் வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

Post a Comment

0 Comments