அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கரூரில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் இடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் பாராட்டினார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே கபடி, கோகோ, கைப்பந்து மற்றும் எறிபந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற 222 பேர் கொண்ட 24 குழுக்களுக்கு 372 கிராம் தங்க காசுகள், 24 கோப்பைகள் மற்றும் 222 சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அதே போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 21 மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடித்த 40 பேர் கொண்ட 4 குழுக்களுக்கு 140 கிராம் தங்க காசுகள், 4 கோப்பைகள் மற்றும் 40 சான்றிதழ்களை வழங்கினார்.

ஆக மொத்தம் 262 பேர் கொண்ட 28 குழுக்களுக்கு 512 கிராம் அதாவது 64 சவரன் எடையுள்ள தங்க காசுகள், 28 கோப்பைகள் மற்றும் 262 சான்றிதழ்களையும் வழங்கினார்.

சிறப்பாக விளையாட்டுப் போட்டிகளை நடத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜெயலலிதா பாராட்டினார். சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி, சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பேச்சு உள்ளது. இந்த நிலையில் 'அம்மா'விடமிருந்து பாராட்டைப் பெற்று விட்டதால் செந்தில் பாலாஜி பெரும் உற்சாகத்தில் இருக்கிறாராம்.

Post a Comment

0 Comments