ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா * தகுதிச் சுற்று பைனலில் வெற்றி

லண்டன் ஒலிம்பிக், ஹாக்கி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நேற்று நடந்த தகுதிச் சுற்று பைனலில் பிரான்சை 8-1 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. சந்தீப் சிங் 5 கோல் அடித்து அசத்தினார்.

லண்டனில் வரும் ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில், பங்கேற்பதற்கான ஹாக்கி தகுதிச் சுற்று ஆட்டம் டில்லியில் நடந்தது. 


நேற்று நடந்த பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் வென்றால் ஒலிம்பிக் போட்டியில் விளையாடலாம் என்ற உற்சாகத்தில் இந்திய வீரர்கள் களமிறங்கினர். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் லக்ரா ஒரு "பீல்டு' கோல் அடித்து, வலுவான துவக்கம் தந்தார். 


19வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு 23வது நிமிடத்தில் பிரான்சின் மார்டின் பிரிசாக் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். 26வது நிமிடத்தில் மீண்டும் "பெனால்டி கார்னர்' மூலம் சந்தீப் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது.


கோல் மழை:
இரண்டாவது பாதியிலும் நம்மவர்கள் கோல் மழை பொழிந்தனர். 38வது நிமிடத்தில் சந்தீப் ஒரு கோல் அடித்தார். 43வது நிமிடத்தில் சுனில் ஒரு கோல் அடிக்க, இந்தியா 5-1 என முன்னிலை பெற்றது. 49வது நிமிடத்தில் சந்தீப் இன்னொரு கோல் அடித்தார். 56வது நிமிடத்தில் ரகுநாத் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். 

நூறு சதவீத வெற்றி:
இறுதியில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் வென்று, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. தவிர, இத்தொடரில் நூறு சதவீத வெற்றியை பெற்றது. தகுதிச் சுற்றில் பிரான்ஸ் இரண்டாவது இடம் பெற்றது.
16 கோல்:
கடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. இம்முறை சந்தீப் சிங் 5 கோல்(19, 26, 38, 49, 51வது நிமிடம்) அடித்து, அணியின் லண்டன் ஒலிம்பிக் கனவை நனவாக்கினார். தொடரில் 16 கோல் அடித்த இவரே ஆட்ட நாயகன் விருதை வென்றார். இவரது அசத்தல் "பார்ம்', தொடர்ந்து, லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

முன்னதாக நடந்த போட்டியில் கனடா அணி, போலந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, மூன்றாவது இடத்துக்கான வெண்கலப் பதக்கம் பெற்றது.

Post a Comment

0 Comments