மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் ''கென்டக்கி கர்னல்'' விருது

அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் உயரிய விருதான "கென்டக்கி கர்னல்' விருது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய ‘‘கென்டக்கி கர்னல் விருது’’ வழங்கப்படுகிறது என்று அந்த மாகான ஆளுநர் ஸ்டீவன் எல். பெஷேர் அறிவித்துள்ளார்.

இந்த உயரிய விருது குறித்து தகவல் அளித்து, வாழ்த்துச் செய்தியையும் கென்டக்கி மாகாண ஆளுநரின் செயலாளரும், உலக அமைதிக்கான தூதருமான ஜார்ஜ் ரீப் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தங்களது சுயநலமற்ற சேவைக்காக கென்டக்கி மாகாணத்தின் உயரிய விருது பெற்றமைக்கு வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த விருது பெறும் முதல் தமிழக அரசியல் தலைவரான ஸ்டாலின் இவ்விருதைப் பெற்றதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றும், அவர் ஒரு தன்னலமற்ற சமுதாய சேவகர், புதிய மாற்றங்களுக்கான சிறந்த சிந்தனையாளர் என அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஸ்டாலின் அளித்த ஊக்கமும், வழிகாட்டுதலும், மகளிர் முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சமுதாய சேவையாற்றுபவர்களுக்கு வழிகாட்டும் விளக்காக அமைந்துள்ளதாகவும், சமூக சேவர்களுக்கு ஸ்டாலின் செயல்பாடுகள் உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விருதானது மக்கள் முன்னேற்றத்திற்கான ஸ்டாலின் அளப்பரிய சேவைகளுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றும் இவ்விருதைப் பெற்றதன் மூலம் இவ்விருதுக்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் கூறி வாழ்த்தியுள்ளார்.

இந்த விருதை மாகான கவர்னரும், வெளியுறவுச் செயலாளரும் கையெழுத்திட்டு வழங்குவார்கள்.

கென்டக்கி கர்னல் விருதைப் பெற்றவர்கள் ''மாண்புமிகு'' என்ற அடைமொழியைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கச் சட்டப்படியும் பிற உலகநாடுகளில் ராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961ம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் படியும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
1812ம் ஆண்டு, கென்டக்கி மாநிலத்தின் முதல் ஆளுநரான ஐசாக் ஷெல்பி தொடங்கிய இந்த விருது ஒருவரின் சமுதாயப் பங்களிப்பு, அவரது நாட்டிற்கு செய்த சேவை மற்றும் சிறந்த சாதனைகளுக்கும் வழங்கப்படுவதோடு, இவ்விருது பெற்றவர்கள் கென்டக்கி மாகாணத்தின் நல்லெண்ணத் தூதர்களாகவும், உலகில் உள்ள மிகச்சிறந்த மனிதர்களுள் ஒருவராகவும் கெளரவிக்கப்படுகிறார்கள்.

இந்த விருது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் லிண்டன் பி.ஜான்சன் (37வது ஜனாதிபதி), இருமுறை ஜனாதிபதியாக இருந்து 46 ஆண்டுகளாக நீடித்து வந்த பனிப்போரைத் தீர்த்து வைத்த 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், 41வது ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும் 42வது ஜனாதிபதி கிளிண்டன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2ம் உலகப் போரில் இங்கிலாந்து பிரதமராக இருந்து மிகச்சிறந்த போர்க்கால ஆட்சியாளர் எனப் பெயர் பெற்றவரும், இருமுறை பிரதமராகப் பதவி வகித்தவரும், சிறந்த பேச்சாளர், அரசியல் தலைவர், வரலாற்றறிஞர் எனப் பெயர் பெற்றவரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாத்துப் பிரதமருமான வின்ஸ்டன் சர்ச்சில் இந்த விருது பெற்றுள்ளார்.

போப் இரண்டாம் ஜான் பால், விண்வெளி வீரர் ஜான் க்ளென், குத்துச் சண்டைவீரர் முகம்மது அலி ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஜான் க்ளென், தனது வரலாற்றுச் சாதனையைப் படைத்தபோது விண்வெளியில் இருந்தபோதே இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments