'சூப்பர் காப்'...மீண்டும் நிரூபித்த தமிழ்நாடு போலீஸ்!

 யாருக்குமே வராத யோசனை, சிந்தனை போலீஸுக்கு மட்டும் வரும் என்பார்கள். அப்படி இருப்பவர்களால் மட்டுமே நல்ல போலீஸாக இருக்க முடியும். அதை தமிழ்நாடு போலீஸ், குறிப்பாக சென்னை போலீஸ் மீண்டும் நிரூபித்துள்ளது.

2 வங்கிகளில் கொள்ளை போய் விட்டது. இரண்டுமே ஒரே மாதிரியான திருட்டு. பட்டப் பகலில், படு சாவகாசமாக வந்து கொள்ளையடித்து விட்டு படு கேஷுவலாக நடந்தே போயுள்ளனர் கொள்ளையர்கள். இரு வங்கிகளிலும் அடிக்கப்பட்ட பணம், ஆயிரம், ரெண்டாயிரம் அல்ல, கிட்டத்தட்ட 39 லட்சம். சாதாரணர்களுக்கே எவ்வளவு கோபம் வரும், அப்படி இருக்கும்போது போலீஸாருக்கு எப்படி இருந்திருக்கும்.

அப்படித்தான் சென்னை போலீஸாரும் இருந்தனர். ஒரு துப்பும் கிடைக்கவில்லை, யார் என்ற அடையாளம் தெரியவில்லை, ஆனால் கைக்கு எட்டும் தூரத்தில்தான் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. கிட்டத்தட்ட மாயாவியிடம் சண்டை போடும் நிலையில் சென்னை போலீஸார் இருந்தனர்.

இந்த இரு வழக்குகளையும் சவாலாக எடுத்துக் கொண்டு தனிப்படைகளை வரலாறு காணாத அளவுக்கு அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார் கமிஷனர் திரிபாதி. இதுவரை எந்த ஒரு சம்பவத்திற்கும் இந்த அளவுக்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு கிட்டத்தட்ட 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நாலாபுறமும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.

இரு வங்கிகளிலும் நடந்த கொள்ளைச் சம்பவங்களின் மோடஸ் ஆப்பரன்டி ஒன்றுதான். ஆள் நடமாட்டம் குறைந்திருந்த நேரத்தில், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத வங்கிகளில், மதிய உணவு நேர வாக்கில்தான் கொள்ளையடித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா இல்லாமல் போய் விட்டதே என்று அத்தனை பேரும் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த வித்தியாசமான ஐடியா போலீஸாருக்கு உதித்துள்ளது. கண்காணிப்பு கேமரா இல்லாத வங்கியாக பார்த்துத்தான் கொள்ளையடித்துள்ளனர். அப்படியென்றால் எந்த வங்கிகளில் கேமரா உள்ளது, எங்கு இல்லை என்பதை அவர்கள் நிச்சயம் நோட்டம் பார்த்திருப்பார்கள். எனவே கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பதிவுகளைப் பார்த்தால், கொள்ளையர்கள் குறித்த துப்பு கிடைக்கலாம் என்பதுதான் அந்த ஐடியா.

இந்த ஐடியாவைக் கொடுத்த அதிகாரி யார் என்பது தெரியவில்லை. ஆனால் அபாரமான யோசனை இது என்பதில் சந்தேகமில்லை. யாருக்கும் இந்த யோசனை வந்திருக்க வாய்ப்பில்லை. மிக மிக புத்திசாலித்தனமான யோசனை இது. நிச்சயம் இந்த யோசனையைக் கொடுத்துவருக்கே முதலில் பரிசைக் கொடுக்க வேண்டும்.

இந்த யோசனை கூறப்பட்டதும் சென்னை மாநகரில் உள்ள காமரா பொருத்தப்பட்ட அத்தனை வங்கிகளிலும் உள்ள வீடியோ பதிவுகளை வாங்கி பார்வையிட ஆரம்பித்தது போலீஸ் படை. மேலும், கொள்ளை போன பாங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்களையும் வரவழைத்து அவர்களுக்கும் போட்டுக் காட்டி கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த யாரேனும் இதில் உள்ளனரா என்று விசாரித்தனர்.

போலீஸாரின் நம்பிக்கை வீண் போகவில்லை. கொள்ளைக் கூட்டக் கும்பலின் தலைவனாக போலீஸாரால் கூறப்பட்டுள்ள வினோத்குமார் ஒரு வீடியோ பதிவில் சிக்கினான்.

வங்கி ஒன்றில் இருந்த அவன், பராக்கு பார்த்தபடியே இருந்துள்ளான். பணம் எடுக்கவோ, போடவோ வந்தது போல அவனது செய்கைகள் தெரியவில்லை. மாறாக, வங்கியைக் கண்காணிப்பதே அவனது முக்கிய நோக்கமாக தெரிந்தது. மேலும் ஒரே நாளில் பல வங்கிகளுக்கு அவன் போயுள்ளான். ஒரே சட்டையுடன் போயுள்ளான்.

இதையடுத்து வினோத்குமார் யார் என்ற வேட்டையை சென்னை போலீஸார் தொடங்கினர். அப்போதுதான் அவன் எஸ்.ஆர்.எம். கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற தகவல் கிடைத்தது. அதன் பிறகு நடந்தது போலீஸ் பாணியில் சொல்வதானால் - வரலாறு.எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால், ஏன் வினோத்குமார் படத்தை மட்டும் காட்டி விட்டு அவனத்து பேக்கிரவுண்டுக்கு கிராபிகஸ் மூலம் வெள்ளையடித்தது போலீஸ் என்பதுதான் புரியவில்லை...

அதேபோல இன்னொரு சந்தேகம் என்ன என்றால், தங்களது வங்கிக்கு வந்த ஒருவன் எந்த வேலையிலும் ஈடுபடாமல் சும்மா சுத்திச் சுத்தி வந்து கொண்டிருந்திருக்கிறானே, ஏன் என்று கேமரா வைக்கப்பட்டிருந்த அந்த வங்கியின் அதிகாரிகள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்பது. ஒரு வேளை காமரா வைத்ததுடன் தங்களது பொறுப்பு முடிந்து விட்டது, அதில் என்ன பதிவானு என்பது குறித்துக் கவலை இல்லை என்று முடிவு செய்து விட்டார்களோ என்னவோ...

எப்படியோ வங்கி அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாலும் கூட போலீஸாரின் புத்திசாலித்தனத்தால் ஒரு கொள்ளைக் கும்பல் மாட்டிக் கொண்டு மாண்டும் போய் விட்டது.

Post a Comment

1 Comments

M.Mani said…
ஆம்.காவல் துறையினர் பாராட்டப்படவேண்டியவர்கள்.