ஜெ.வுக்கு விஜயகாந்த் கடும் எச்சரிக்கை

தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும், அமைதியாகவும், பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி நீண்ட நேரம் அவர் பேசினார்.

விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்...

நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம்.இவர்கள்தான் வந்தார்கள், இவர்கள்தான் கூப்பிட்டார்கள். நாங்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் இவர்கள் ஜெயித்தார்கள். நாங்கள் மட்டுமில்லை, மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் ஜெயித்தார்கள்.

எங்களைப் பார்த்து திராணி இருந்தால் என்று கேட்கிறார்.இவர் கடந்த ஆட்சியின்போது 13 இடைத்தேர்தலில் ஜெயித்தாரா. 5 தொகுதிகளில் நடந்த தேர்தலில் போட்டியிடப் பயந்து ஓடியவர் இவர்.

மதுரைக்கே மல்லிகைப் பூவா என்பார்கள், திருநெல்வேலிக்கே அல்வாவா என்பார்கள். அதுபோல தேமுதிகவுக்கே சவாலா. எங்களைப் பார்த்து சவால் விடாதீர்கள். அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.

தனியாக போட்டியிட தயார். நாளைக்கே நாங்க ராஜினாமா செய்கிறோம், நீங்களும் வாங்க, கவர்னர் ஆட்சியில் தேர்தலை சந்திப்போம். ரெடியா. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும்.

சட்டசபையில் சபாநாயகர் சொன்னதும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆனால் எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததால்தான் நான் எழுந்து நின்றேன். நான் எழுந்து நின்றதை மட்டும் காட்டினார்களே, எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததை ஏன் காட்டவில்லை. அதையும் காட்டியிருக்க வேண்டுமல்லவா, அதுதானே நியாயம்.

நியாயத்தைப் பத்தி இவங்க பேசக் கூடாது. 13 நாளில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தியவர் இவர். இவர் நியாயம் பத்திப் பேசலாமா.

தேமுதிக சரியில்லை என்று இப்போது சொல்கிறாரே, அதை ஏன் கூட்டணி முடிவானபோது சொல்லவில்லை, தேமுதிக தொகுதிகளை அறிவித்தபோது ஏன் செய்யவில்லை.

நாங்கள் இல்லாவிட்டால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். கூட்டணி இல்லாமல் ஒருபோதாவது அதிமுக போட்டியிட்டுள்ளதா. எம்.ஜிஆர். இருந்தபோதும் கூட கூட்டணி இல்லாமல் அதிமுக போட்டியிட்டதில்லை.

ஊர் கூடித்தானே தேர் இழுத்தோம். எல்லாக் கூட்டணியும் கூடித்தானே வெற்றி பெற வைத்தோம். சட்டசபையில் நாங்கள் மக்கள் பிரச்சினைகளைத்தானே பேசப் போனோம். கூட்டணி குறித்து பேசப் போகவில்லை.

என்னைப் பார்த்தால் அறுவறுப்பாக உள்ளது என்கிறார். இவரைப் பார்த்தால் கூடத்தான் அறுவறுப்பாக உள்ளது, அசிங்கமாக இருக்கிறது. நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லையா. அமைதியாக இருக்கவில்லையா.

பேசுவதை சர்வாதிகாரமாக தடுக்கிறார்கள். பேச வாய்ப்புக் கொடுத்தால்தானே தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

தானே புயல் நிலவரம் பற்றிப் பேச விடவில்லை, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேச விடவில்லை.

இன்றைய நிலவரம் என்று போர்டு போடுவார்களே அது போல இன்றைய மந்திரிகள் என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது. 

தூர்தர்ஷன் ஒரு சார்பாகவே நடக்கிறது. ஜெயா டிவியில் எடிட் செய்து தருவதை போடாதே, எல்லாவற்றையும் போடு.

நீங்க மட்டும்தான் மக்கள் பத்திப் பேசுவீங்களா, மத்தக் கட்சிக்காரன் பேச மாட்டானா. ஆணவத்தில் இருக்கிறார் ஜெயலலிதா, மமதையில் இருக்கிறார்.

எங்களுக்கு இறங்குமுகம் என்று நீங்கள் சொல்லக் கூடாது. மக்கள் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மட்டும்தான் தொடர்ந்து ஆட்சி புரிந்தவர். நீங்களும், மத்தக் கட்சியும் மாறி மாறித்தான் ஆள முடிந்தது. இப்போதுதானே விஜயகாந்த் வந்துள்ளான், பொறுத்திருந்து பாருங்கள் என்னை. 

2005ல் கட்சி ஆரம்பித்து தொடர்ந்து தனியாகத்தானே தேர்தலை சந்தித்தேன். நான் தலை குணிந்தாலும் உங்களைத் தலை குணிய வைக்க மாட்டேன் என்று சேலத்தில் சொல்ல விட்டுத்தான், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்பத்தானே கூட்டு சேர்ந்தேன்.

இவங்களை பாராட்டிக்கிட்டே இருக்கனும், இதுக்குப் பெயரா ஆட்சி. பாராட்ட மட்டும் டைம் தர்றீங்கள்ள, விமர்சனம் செய்யவும் டைம் தாங்க. புள்ளி விவரம் இருந்தா பேசுங்க என்கிறார்கள். ஊரைக் கொள்ளையடிச்சதுக்கு உங்க கிட்ட புள்ளி விவரம் இருக்கா.

யார் மந்திரி, யார் ஐஏஎஸ், யார் ஐபிஎஸ் என்று இவர்களுக்கேத் தெரியாது. இவங்கதான் தகுதி இல்லாதவர்.

நான் யாருக்கும் பயப்படவில்லை. மக்கள் மனது வைத்தால்தான் யாராக இருந்தாலும். நான்தான் புலி என்றால், ஆட்சிக்கு நாளை நான் வந்தாலும் இப்படிப் பேச முடியும். அப்ப என்ன சொல்வீங்க.

ஜெயலலிதா திருந்தி விட்டார் என நினைத்தேன், இல்லை, பழைய குருடி கதவைத் திருடி கதைதான். ஜெயலலிதா திருந்தவில்லை, ஆணவத்துடன் இருக்கிறார். போன 5 வருடமாக எங்கே போனீர்கள். தேர்தலை சந்திக்கக் கூட திராணி இல்லையே உங்களுக்கு. நான் பயப்படாமல்தான் சந்தித்தேன்.

ஆவுடையப்பன் சபாநாயகராக இருந்தபோது இவரை 1 மணி நேரம் பேச விட்டார்கள். இவர் பேசலாம், நாங்க பேசக் கூடாதா.

எனக்குப் பயமெல்லாம் கிடையாது. மரியாதைக்கு மரியாதை, அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். மிரட்டிப் பணிய வைக்க வைத்தால் அது முடியாது. 

தகுதி இல்லை என்கிறார்கள். உங்களுக்குத்தான் தகுதி இல்லை. தகுதியில்லாத உங்களுடன் கூட்டணி வைத்ததை நினைத்து நான்தான் வெட்கப்படுகிறேன்.

நன்றி கெட்டவங்க, எப்படிக் கெஞ்சுனாங்க என்று எனக்குத் தான் தெரியும். பேச நினைத்தால் நான் நிறையப் பேசுவேன். பேசக் கூடாதென்று அமைதியாக இருக்கிறேன்.

கேவலப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கீழ் மக்களை உட்கார வைத்து விட்டார்கள். அந்தமக்களை தூக்கி நிறுத்தத்தான் நான் இனிமேல் போராடப் போகிறேன்.

இப்போது சொல்கிறேன், என்ன திமிராக சொல்கிறான் என்று தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த முறை தேமுதிகதான் ஆட்சியைப் பிடிக்கும். பிடிக்கப் போவதைப் பாருங்கள்.

நாளை முதல் எனது கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குப் போவார்கள். நான் மக்கள் மன்றத்திற்குப் போகப் போகிறேன் என்றார் விஜயகாந்த்.

Post a Comment

1 Comments

"என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே" ! நன்றி சார் !