வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ரூ.3 கோடி மோசடி


ஊட்டியை சேர்ந்தவர் விக்கி என்கிற விவேக் (24). பட்டதாரியான  இவரை  நேற்று 3 பேர் காரில் கடத்தி சென்றனர். கார் பொள்ளாச்சி - உடுமலை மெயின் ரோட்டில் வந்த போது சற்று நேரம் நிறுத்தப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விவேக் காரில் இருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.  அதில் தன்னை 3 பேர் காரில் கடத்தியதாக கூறி இருந்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது விவேக் பலரிடம் பணம் மோசடி செய்திருப்பதும் அதன் காரணமாகவே அவர் கடத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார்  துருவி, துருவி விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.  வெளி நாட்டில் அதிக சம்பளத்திற்கு  வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் விவேக் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
விளம்பரமும் செய்தார். இதற்காக புரோக்கர்களை நியமித்து தமிழகம் முழுவதும் தனது திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார். இதில் கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, புதுக்கோட்டை, சத்திய மங்கலம், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை போன்ற நகரங்களில் இருந்து ஏராளமான படித்த இளைஞர்கள் விவேக்கை தொடர்பு கொண்டனர். அவர்களிடம் விவேக், உங்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் இத்தாலி, தாய்லாந்து நாட்டில் வேலை காத்திருக்கிறது.

அங்கு செல்ல பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் போன்ற செலவுக்கு முன் பணமாக ஒரு தொகை செலுத்த வேண்டும் என்றார். ஆளுக்கு தகுந்தபடி லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். விவேக் தன்னிடம் வேலை கேட்டு வருபவர்களிடம் பணத்தை நேரடியாக வாங்காமல் தனது தந்தை, தாய் வங்கி கணக்கில் கட்ட சொல்லி பெற்றுள்ளார். ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 2 லட்சம் முதல் 7 லட்சம் வரை கறந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 90 பேரிடம் ரூ. 3 கோடிக்கு மேல் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் தங்களை வெளிநாட்டுக்கு  அனுப்பி வைக்க வேண்டும் என நச்சரித்த போது முதல் கட்டமாக 40 பேரை தேர்வு செய்து இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். அதன் படி 40 பேரை தாய்லாந்து நாட்டிற்கு விமானம் மூலம் அழைத்து சென்றார்.

அங்கு அனைவரையும் ஒரு ஓட்டலில் தங்க வைத்தார்.  ஆனால் விவேக் மட்டும் வேறு ஓட்டலில் தங்கினார். ஆனாலும் தினமும் 40 பேரையும் வந்து பார்த்து சென்றார். விவேக் அழைத்து வந்த 40 பேரும் வெளியில் சுற்றி திரிந்தபோது பாங்காங் போலீசார் சந்தேகப்பட்டு   பிடித்தனர். அவர்களிடம்  டூரிஸ்ட் விசா மட்டும் இருந்தது. போலீசார் விசாரித்த போது தாங்கள் இத்தாலி நாட்டுக்கு வேலைக்கு செல்ல தங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

அதற்கு போலீசார் இத்தாலிக்கு வேலைக்கு செல்ல இந்த விசா செல்லாது என கூறினார்கள்.  அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். அவர்களில் 13 பேரை பாங்காங் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மீதி உள்ள 27 பேருக்கும் அபராதம் விதித்தனர். ஒவ்வொருவரும் தலா ரூ. 75 ஆயிரம் அபராதம் கட்டி விட்டு  இந்தியா செல்ல வேண்டும் அல்லது ஜெயில் தண்டனை தான் என பாங்காங் போலீசார் எச்சரித்தனர்.

இதனால் பயந்து போன அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 27 பேரின் பெற்றோர்களும் கடன் வாங்கி பாங்காங்கிற்கு பணத்தை அனுப்பி அவர்கள் தமிழகம் வர ஏற்பாடு செய்தனர்.அவர்கள் அபராதம் கட்டி விட்டு தமிழகம் திரும்பினர்.  இந்த நிலையில் விவேக் தமிழ் நாட்டிற்கு தப்பி ஓடி வந்து விட்டார்.

அவரை ஏமாற்றப்பட்டவர்கள் ஊட்டியில்  கடந்த 6 மாதமாக  தேடினார்கள். ஆனால்  விவேக் மற்றும் அவரது பெற்றோர் தலை மறைவாகி விட்டது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டதாக தெரிகிறது. கடந்த வாரம் விவேக் ஊட்டி வந்துள்ளதாகவும், தனது காதலி வீட்டில் தங்கி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் கிடைத்தது.

அவர்களில் புதுக்கோட்டையை சேர்ந்த 3 பேர் ஊட்டி வந்தனர். அவர்கள் பணத்தை திரும்ப பெறும் நோக்கத்தில் விவேக்கை ஊட்டியில் இருந்து ஒரு காரில் புதுக் கோட்டைக்கு கடத்தி சென்றனர். அப்போது தான் அவர்களிடமிருந்து விவேக் தப்பி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மோசடி குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

Post a Comment

0 Comments