திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் விவேக்

தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சாமி கும்பிடுபவர்களையும், வாஸ்து உளளிட்டவற்றை நம்புபவர்களையும், கடவுள் பக்தி உள்ளவர்களையும் சரமாரியாக விமர்சிக்கும், நக்கலடிக்கும், கிண்டலடிக்கும் காமெடி நடிகர் விவேக், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப் போய் சாமியை பய பக்தியுடன் வணங்கிய விவரம் வெளியாகியுள்ளது.

நாத்திகம் பேசுவோரில் பலரும் உள்ளுக்குள் ஆத்திகவாதிகளாகவே இருந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் முதல் அத்தனை துறையினரும் இதற்கு விதிவிலக்கில்லை. திமுக தலைவர் கருணாநிதி ஒரு தீவிர நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது குடும்பத்தினர் தீவிர ஆத்திகர்கள்.அதேபோல சினிமாவில் விவேக்கைப் போல நாத்திகம் பேசியவர்கள் யாருமில்லை. நான் பெரியாரின் வழி வந்தவன் என்று பெருமை பொங்கக் கூறுவது விவேக்கின் வழக்கம். மேலும், தனது படங்களிலெல்லாம் ஆத்திகர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிண்டலடிப்பார் விவேக். குறிப்பாக வாஸ்து பார்க்கிறவர்களையும், நாள் நட்சத்திரம் பார்ப்பவர்களையும், சாமியை நம்பி காரியத்தில் இறங்குகிறவர்களையும் இவர் கிண்டல் அடிக்காத படமே இல்லை.

அப்படிப்பட்ட விவேக், திருநள்ளாறு கோவிலுக்குப் போய் சனீஸ்வரனை பய பக்தியுடன் வணங்கி விட்டு வந்துள்ளார்.சமீபத்தில் சனிப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருநள்ளாறு கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து சனி பகவானை தரிசித்துச் சென்றனர். பரிகாரங்களைச் செய்தனர்.

சனிப் பெயர்ச்சிக்கு அடுத்த நாளான சனிக்கிழமையன்று அமாவாசை என்பதால் அது விசேஷ தினமாக இந்துக்களால் கருதப்படுகிறது. இதையொட்டி அன்றும் பல லட்சம் பேர் சனி பகவானை தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர்.

அந்த நாளில்தான் காமெடி நடிகர் விவேக்கும் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்தார். அவருடன் உள்ளூர் எம்.எல்.ஏ. சிவாவும் வந்திருந்தார். கோவிலுக்கு வந்த விவேக் ஒவ்வொரு சன்னதியாக சென்று பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவில் பிரசாதத்தையும் பய பக்தியுடன் வாங்கிக் கொண்டார்.

Post a Comment

0 Comments