சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடு-மத்திய அரசு



ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துகளைக் கண்காணித்து, அவற்றில் அவதூறானவற்றையும், வெறுப்பைத் தூண்டுவனவற்றையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, பிரபல இணையதள நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் மற்றும் யாஹூ ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் பேச்சு நடத்தியுள்ளார். 

அப்போது, சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பதிவுகளை, அவை வெளியாவதற்கு முன்பு தணிக்கை செய்ய வேண்டும் என்றும், அவற்றில் மோசமான கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் அவர் விவரித்துள்ளார்.மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் இந்தக் கோரிக்கையைக் கண்டு திணறிப் போன கூகுள், ஃபேஸ்புக் முதலிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்குமாறு புகார் அளித்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகின.

மத்திய அரசின் அறிவுறுத்தல் பேரில், அமைச்சர் கபில் சிபலின் இந்த முன்னெடுப்பு நடவடிக்கையில் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர், இந்திய இணையவாசிகள்.
இதனால், மத்திய அமைச்சர் கபில் சிபலை கண்டித்தும், கிண்டல் செய்தும் சமூக வலைத்தளங்கள் மூலமே தங்கள் பதிவுகளைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
சாத்தியப்படாத ஒரு கோரிக்கையை முன்வைத்ததாகக் கூறி, அமைச்சர் கபில் சிபலை ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் நொடிக்கு 50 கருத்துகளைக் கொட்டின. இதற்காக பயன்படுத்தப்பட்ட #IdiotKapilSibal என்ற டேக் தான் டிவிட்டர் டிரெண்டில் முன்னிலை வகித்தது. 

அரசின் எதிர்பார்ப்பு என்ன? - சிபல் விளக்கம்

சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு பரவியதால், இதுதொடர்பான விளக்கத்தை நிருபர்களிடம் கபில் சிபல் அளித்தார். அப்போது, தாம் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, கண்காணித்துக்கு குறிப்பிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்றே கேட்டுக்கொண்டதாகக் கூறினார். 
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலான இணையத்தில் வெளியான படங்களை காட்டிய கபில் சிபல், மத அமைப்புகளும், அதன் தலைவர்களும் இதுபோல் இழிவுபடுத்தப்படும் வகையிலான படங்களும் கருத்துகளும் இணையத்தில் மலிந்திருப்பதாக குறிப்பிட்டார். 

நாட்டு மக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றவர், இணையதள நிறுவனங்கள் இது தொடர்பாக நடவடிக்கையை எடுக்கத் தவறினால், அரசு தாமே முன்வந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். 
மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயல்படவில்லை என்று விளக்கிய அவர், இணையத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான விஷயங்கள், கருத்துகளை வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு, அந்தந்த நிறுவனங்கள் உரிய முறையைக் கையாள வேண்டும் என்று கூறினார். 

இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி, அவரிடம் தெளிவான பதில் இல்லை. ஏனெனில், இந்தியாவில் தற்போது சுமார் 10 கோடி இணையவாசிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 2.8 கோடி பேர் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றனர். டிவிட்டரிலும் நாளுக்கு நாள் பயனர்கள் எண்ணிக்கை மிகுந்து வருகிறது. இவர்களது கோடிக்கணக்கான பதிவுகளை எப்படிக் கண்காணித்து நீக்க முடியும் என்பதே இணையவாசிகளின் கேள்வி.

ஃபேஸ்புக் விளக்கம்... 

மத்திய அரசின் எச்சர்க்கையைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'மக்கள் சுதந்திரமாக விவாதிக்கவே ஃபேஸ்புக் விரும்புகிறது. மற்றவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து, ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டும் கருத்துகள், படங்கள் போன்றவற்றை அகற்றிவிடுவோம். இதற்காகவே 'ரிப்போர்ட் அப்யூஸ்' பகுதி செயல்பாட்டில் உள்ளது. இந்திய அரசின் கவலைகளை உணர்கிறோம். தொடர்ந்து, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்போம்," என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.

இந்த விவகாரம், இணையவாசிகளிடம் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Post a Comment

1 Comments