10 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்

வேலை நாடுநர்களின் விவரங்களை பதிவு செய்தல், பதிவு செய்தவர்களின் விவரங்களை வேலை அளிப்பவர்களுக்கு பரிந்துரை செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தொழில் நெறி வழிகாட்டுதல் ஆகியப் பணிகளை மாவட்டம் தோறும் உள்ள வேலைவாய்ப்பக அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், வேலை நிலவரத் தகவல் சேகரித்தல் மற்றும் தொகுத்தல், வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் தொழிற்பயிற்சி அளித்தல் போன்ற பணிகளையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மேற்கொண்டு வருகிறது.

இவைதவிர மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் திறனற்றோர், தொழில்நுட்பத் திறனுடையோர் ஆகியோருக்காக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இயங்கி வரும் வேலைவாய்ப்பக அலுவலகங்கள் மட்டுமே சொந்தக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இதர 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. 

ஆண்டுதோறும், அதிக அளவில் படித்த இளைஞர்கள் உருவாவதால், வேலை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் வேலை வாய்ப்பகங்களில், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், அதிக எண்ணிக்கையில் வரும் வேலை நாடுபவர்களுக்கு, தேவையான பணிகளை ஆற்றுவதற்கு, தகுந்தவாறு நல்லதொரு சூழ்நிலை இல்லாத நிலைமை நிலவுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது. 

இதன்படி முதற்கட்டமாக 2011-12-ம் ஆண்டில் நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுக்கோட்டை, விருதுநகர், ஈரோடு, அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 10 இடங்களிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒவ்வொன்றுக்கும் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையினால் மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகங்கள் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் பெற்று நல்ல முறையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வழிவகை ஏற்படும் என்று அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.


                         ----------தமிழக அரசு

Post a Comment

0 Comments