தீபாவளி படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர்கள் மீது நடவடிக்கை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நகரங்களில் அதிக பட்ச கட்டணம் ரூ,120 ஆகவும் கிராமங்களில் ரூ.40 ஆகவும் உள்ளது. ஆனால் புதுப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அமைச்சர் செந்தமிழன் அறிவித்துள்ளார். ஆனால் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்குமாறு தங்களை நிர்ப்பந்திப்பதாகவும் இதனால் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் தியேட்டர்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தீபாவளி படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருப்பூர் பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து நேற்று ஒரே நேரத்தில் 11 தியேட்டர்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவையில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த ஒரு தியேட்டரின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இந்த சோதனைகள் நடக்கலாம் என தகவல் பரவியுள்ளது. தமிழ்நாடு திரைப்பட ரசிகர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன் உள்துறை செயலாளர், வணிக வரித்துறை செயலாளர் போன்றோருக்கு அனுப்பி உள்ள மனுவில் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் அரசு நிர்ணயித்த விலைக்கு கேளிக்கை வரி செலுத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது. தியேட்டர்களில் முத்திரை குத்தாத கட்டண டிக்கெட்டுகள் கொடுக்கின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments