ஹாட்ரிக்' வெற்றி மூலம் இந்திய அணி தொடரை வென்றது



சொந்த மண்ணில் சாதித்துக் காட்டியது இந்திய அணி. நேற்று நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ரகானேவின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் "ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 3-0 என "சூப்பராக' கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி இந்திய அணி வென்றது. நேற்று மூன்றாவது போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. 
"டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
குக் ஏமாற்றம்:
இங்கிலாந்து அணிக்கு குக் (3) விரைவில் அவுட்டாக, இம்முறையும் துவக்கம் சரியாக அமையவில்லை. பின் கீஸ்வெட்டர், டிராட் இணைந்தனர். பிரவீண் குமார், வினய் குமார் பந்துகளில் சிக்சர் அடித்து, அதிரடியாக ரன்கள் சேர்த்தார் கீஸ்வெட்டர். இவர் 36 ரன்களுக்கு கோஹ்லி பந்தில் போல்டானார்.
பீட்டர்சன் அசத்தல்:
டிராட்டுடன் ஜோடி சேர்ந்த பீட்டர்சன் அதிரடியாக ரன் சேர்த்தார். பிரவீண் குமார் ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசினார். அரைசதம் கடந்த பீட்டர்சன்(64), ஜடேஜா சுழலில் சிக்கினார் 
சமித் அதிரடி:
 நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராட், தனது 15வது அரைசதம் கடந்தார். போபரா 24 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சமித் படேல், ஆட்டத்தை தன்கையில் எடுத்துக்கொண்டார். வினய் குமார், உமேஷ் யாதவ் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. உமேஷ் யாதவ் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி விளாசிய இவர், வினய் குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. தனது முதல் அரைசதம் கடந்த சமித் படேல் 70 (43 பந்துகள்), டிராட் 98 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். 
கடின இலக்கு:
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில், பார்த்திவ் படேல் 38 ரன்களுக்கு அவுட்டானார்.
"சூப்பர்' ஜோடி:
அடுத்து ரகானேயுடன் காம்பிர் இணைந்தார். 17 ரன்கள் எடுத்திருந்த போது, "கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய காம்பிர், பிறகு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார். இருவரும் ஒன்றும் இரண்டுமாக ரன்கள் சேர்க்க, "ரன் ரேட்' குறையாமல், ஸ்கோர் சீராக உயர்ந்தது. 
ரகானே அபாரம்:
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே, சர்வதேச ஒருநாள் அரங்கில் இரண்டாவது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில், 27வது அரைசதம் கடந்த காம்பிர் (58), பீட்டர்சனின் கலக்கல் "கேட்ச்சில்' வெளியேறினார். ரகானே, 91 ரன்களுக்கு அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். அடுத்து வந்த ரெய்னா "டக்' அவுட்டானார். சிறிது நேரத்தில் விராத் கோஹ்லியும் (35) வெளியேற, "டென்ஷன்' ஏற்பட்டது.
இந்தியா வெற்றி:
பின் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா சேர்ந்து துணிச்சலாக ஆடினர். ஸ்டீபன் பின், டெர்ன்பக் வீசிய போட்டியின் 48, 49வது ஓவர்களில், இருவரும் இணைந்து 23 ரன்கள் எடுக்க, இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டன. 
பிரஸ்னன் வீசிய இந்த ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்த தோனி, அசத்தல் வெற்றி தேடித் தந்தார். இந்திய அணி 49.2 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. தோனி (35), ரவிந்திர ஜடேஜா (26) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ரகானே வென்றார்.
 இரு அணிகள் இடையிலான நான்காவது போட்டி வரும் 23ம் தேதி மும்பையில் நடக்கவுள்ளது.
இந்தியா "நம்பர்-3'
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி (116 புள்ளி), ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்கா (114) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (131 ), இலங்கை (119) அணிகள் உள்ளன. இங்கிலாந்து அணி (108) ஐந்தாவது இடத்தில் உள்ளது.
பழி தீர்த்தது
சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி, டெஸ்ட் (0-4), ஒருநாள் (0-3) மற்றும் "டுவென்டி-20' தொடரில் ஒரு வெற்றி கூட பெறாமல் மோசமாக இழந்தது. இம்முறை இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியை, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வீழ்த்தி, தொடரை கைப்பற்றி பழி தீர்த்தது.

Post a Comment

0 Comments