NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Saturday, October 15, 2011

ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம்

""அரசு நிர்வாகத்தில், ஒளிவுமறைவற்ற தன்மையை உறுதி செய்ய, தகவல் பெறும் உரிமை மிகவும் பயனுள்ள ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதே நேரத்தில், ஊழல் குறித்த ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்துவோரைப் பாதுகாக்க, அடுத்த சில மாதங்களில், சட்டம் கொண்டு வரப்படும்'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மத்திய தகவல் ஆணையத்தின் இரண்டு நாள் மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம், தங்களின் நிர்வாகத்தில் சிலர் அத்துமீறி நுழைவதாக, அரசில் உள்ள சில பிரிவினர் நினைக்கின்றனர். அதனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்


. எந்தச் சூழ்நிலையிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படாது. அரசு நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மையை உறுதி செய்யவும், மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கவும், தகவல் பெறும் உரிமை, ஒரு பயனுள்ள கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என, அரசு விரும்புகிறது. அதே நேரத்தில், தகவல் பெறும் உரிமை, வேண்டுமென்றே அரசின் நிர்வாகத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது. எனவே, இந்த விஷயத்தில், மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியது அவசியம். பொது நிர்வாகத்திடம் உள்ள குறைவான வளம், குறிப்பிட்ட கால அளவு மற்றும் தகவல்களை வெளியிடுதல் இடையே, ஒரு சரி சமமான நிலையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும், தகவல் பெறும் உரிமையானது, நேர்மையைச் சீர்குலைப்பதாக அமையக்கூடாது. ஊழல் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடுவோரைப் பாதுகாப்பதற்கான சட்டம், அடுத்த சில மாதங்களில் இயற்றப்படும். இதன் மூலம், பொது நிர்வாகத்தில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவோருக்கு எதிராக, வன்முறைத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் குவிவதைத் தடுக்க, விதி விலக்கு அல்லாத பிரிவின் கீழ் வரக்கூடிய தகவல்களை எல்லாம், அரசு நிர்வாகத்தினர் பகிரங்கமாக வெளியிட வேண்டும். தகவல் கேட்டு விண்ணப்பங்கள் வரும் வரை காத்திருக்காமல், அரசு நிர்வாகத்தினரே, தானாக முன்வந்து தகவல்களை வெளியிட்டால், அரசு நிர்வாகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான நேரம் மிச்சமாகும். 


தகவல் அறியும் உரிமை சட்டம் வந்த பிறகு, அதிகாரிகள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. எந்தவொரு கோப்பிலும் கையெழுத்திடுவதற்கு முன், நிறைய பயப்படுகின்றனர். அவ்வாறு கையெழுத்துப் போட்டால், அது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியே வந்துவிடுகிறது என நினைப்பதே அதற்கு காரணம். அதிகாரிகள் மத்தியில் ஏற்படும் தயக்கம் காரணமாக அரசாங்க நிர்வாகம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்நிலையை மாற்ற, ஏதாவது செய்திட முடியுமா என்றும் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காண வேண்டும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். 

Post Comment

No comments:

POPULAR

Followers

FOLLOW ME