வகுப்பு அறையில் மது அருந்தும் குடிமகன்கள்

அனகாபுத்தூர் அரசு ஆதி திராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியை அப்பகுதி "குடிமகன்'கள் இரவு நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும் மது அருந்தும் "பாராக' பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் விட்டு செல்லும் பாட்டில்களை தினந்தோறும் ஆசிரியைகள் அப்புறப்படுத்துகின்றனர். இந்த அட்டகாசம் குறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏழை மாணவ, மாணவியர் கல்வி கற்க வசதியாக கடந்த 1931ம் ஆண்டு அனகாபுத்தூரில் துவக்க பள்ளி ஒன்று துவங்கப்பட்டது. பிற்காலத்தில் தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இப்பள்ளி இயங்கியது. பல ஆண்டுகளாக துவக்க பள்ளியாக இருந்த இந்த பள்ளி சில ஆண்டுகளுக்கு முன், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 435 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். காமராஜர் நெடுஞ்சாலையை ஒட்டி அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு அருகே, இந்த பள்ளி அமைந்துள்ளது. ஆள்நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் பள்ளி இருந்தாலும், இரவு நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும் இப்பள்ளியை இப்பகுதி "குடிமகன்'கள் மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருவது தொடர்ந்தது.

இதைத் தொடர்ந்து கடந்தாண்டு பள்ளிக்கு கிரில் கேட் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இருப்பினும், சுற்றுச்சுவரை ஏறி குதித்து "குடிமகன்'கள், இப்பள்ளி வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவதும், பாட்டில்களை உடைத்து நொறுக்குவதும், பள்ளி சுவர்களில் தகாத வார்த்தைகளை எழுதி வைப்பதும், மலம், சிறுநீர் கழிப்பதும் வாடிக்கையாக உள்ளது. சுகாதார பணியாளர்கள் இல்லாததால், தினமும் காலையில் பள்ளிக்கு வரும் ஆசிரியைகள் வகுப்பறையில் உள்ள சரக்கு பாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், சங்கர்நகர் போலீசார் இரவில் இப்பகுதியில் ரோந்து செல்லாமல், மெத்தனமாக உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ஆதி திராவிடர் நலத்துறை பள்ளியில் 11 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்து இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதி ஏழை மக்களின் வசதிக்காக உள்ள இப்பள்ளியை சரியாக நடத்த விடாமல், சில கும்பல் அட்டகாசம் செய்கிறது. பள்ளி வகுப்பறை தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று மது அருந்துகின்றனர். முன்பு ஒரு நாள் பள்ளிக்கான குடிநீர் தண்ணீர் தொட்டியில் மலம் மிதந்தது. வகுப்பறைக்குள் சிறுநீர், மலம் கழிக்கும் கொடுமையும், இதை மறுநாள் பள்ளிக்கு வரும் ஆசிரியைகள் சுத்தம் செய்யும் கொடுமையும் நடக்கிறது. போலீசார் இதை கண்டுகொள்வதே கிடையாது. சமீபத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் இப்பள்ளியில் ஆய்வு நடத்தினார். அமைச்சர் மீண்டும் ஒருமுறை ஆய்வு நடத்தி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூக விரோதிகளை அடக்க போலீசாருக்கு இங்கு,"ரெகுலர் பீட்' ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments