ஓட்ட பந்தய போட்டியில் மயங்கி விழுந்து போலீசார் சாவு

பதவி உயர்வுக்காக நடந்த ஓட்ட போட்டியில் பங்கேற்ற தலைமை காவலர்கள் 5 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து இறந்து போயிருக்கிறார்கள். அத்தனை பேரும் 35 முதல் 48 வயதுக்குள் இருப்பவர்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உ.பி. மாநிலத்தில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கான 5487 காலியிடங்களை நிரப்ப தேர்வு நடந்தது. எழுத்து தேர்வில் 3,900 பேர் தேறினர். உடல் தகுதி தேர்வில் பாஸ் செய்தால் பதவி நிச்சயம். 10 கி.மீ. தூரத்தை 90 நிமி டங்கள் ஓடிக் கடக்க வேண்டும் என்பது ஒரு போட்டி. அதில்தான் சிக்கல். கடந்த ஒரு வாரத்தில் மீரட், கான்பூர், அசம்கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. முடியாது எனத் தெரிந்தும் போட்டியில் பங்கேற்ற தலைமை காவலர்களில் 100க்கும் மேற்பட்டோர் ஓடும்போதே மயங்கி விழுந்துள்ளனர். அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் மயங்கி விழுந்து இறந்தே போய்விட்டனர். முதலில் 3 காவலர்கள் இறந்தபோதே, ஓட்டப் போட்டியில் பங்கேற்பவர்கள் மருத்துவ தகுதி சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் அதன் பின்னும் 2 காவலர்கள் இறந¢துபோக, பிரச்னை விசாரணை கமிஷன் வரை போய்விட்டது.
தலைமை காவலர்கள் தினமும் உடற்பயிற்சிகளை செய்து வந்திருந்தால் 10 கி.மீ. தூரத்தை 90 நிமிடத்தில் கடப்பது என்பது பெரிய விஷயமே இல்லை. அப்படி அவர்கள் உடற்பயிற்சி செய்யாதது அவர்கள் தவறுதான். அதைக் கண்காணிக்காதது உயர் அதிகாரிகளின் தவறு. காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனமே இத்தனை பேர் இறப்புக்கு காரணம் என ஓய்வு பெற்ற உ.பி. டிஜிபி ஒருவர் கூறியிருக்கிறார்.


கஷ்டமான ஓட்டப் போட்டியை கடுமையான வெயில் காலத்தில் நடத்தினால், உடல் தகுதி இருப்பவராலேயே 10 கி.மீ. தூரத்தை 90 நிமிடங்களில் ஓடிக் கடப்பது கஷ்டம். இதுபோன்ற போட்டிகளை எல்லாம் குளிர் காலத்தில் தான் நடத்த வேண்டும் என போட்டியில் பங்கேற்ற தலைமை காவலர்கள் கூறியுள்ளனர். ஓட முடியாத காவலர்களால், உ.பி. கிரிமினல்களுக்கு கொண்டாட்டம்தான். அதனால்தான் கிரிமினல்கள் கொடி கட்டி பறக்கிறார்கள் என கிண்டலடிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

Post a Comment

0 Comments