ஒரு ரூபாய்க்காக 12 மணி நேரம் போராடிய கரூர் கல்லூரி மாணவர்


மொபைல்போன் ரீஜார்ஜ் செய்ய, ஒரு ரூபாயை அதிகமாக தர விருப்பமின்றி, கல்லூரி மாணவர் ஒருவர், கடை உரிமையாளர் மீது, கரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.திண்டுக்கல் மாவட்டம், சின்னதம்பிபட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் சத்யராஜ், 18. இவர், தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படிக்கிறார்.நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு, கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பாப்புலர் எலக்ட்ரானிக்ஸ் கடையில், "ஐடியா' நிறுவனத்தின் எஸ்.எம்.எஸ்., பூஸ்டர் பேக், 35 ரூபாய்க்கு போட, கடை உரிமையாளர் அப்துல் மாலிக், 35, என்பவரிடம் கூறினார். அப்துல் மாலிக், ஒரு ரூபாய் கூடுதலாக, 36 ரூபாய் கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம், சத்தியராஜ் புகார் கூற, அவர், சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினார்.

அங்கு சென்ற சத்தியராஜ், போலீசார் ஒருவரை, கடைக்கு அழைத்து வந்தபோது, அப்துல் மாலிக் அங்கு இல்லை. "ஒரு ரூபாய்க்கு வழக்கு போட முடியாது' எனக் கூறியும், சத்தியராஜ் விடவில்லை.மீண்டும் புகார் கொடுக்க, போலீஸ் ஸ்டேஷன் சென்றார். இரவு நேரப்பணியில் இருந்த போலீஸ்காரர் திட்டியதால், "நீங்கள் புகாரை வாங்க வில்லை என்றால், நான் எஸ்.பி., யிடம் புகார் செய்வேன்' என, சத்தியராஜ் தெரிவித்தார்.அதிர்ச்சியடைந்த மற்றொரு போலீஸ்காரர், "காலையில் வா' எனக் கூறி சத்தியராஜை அனுப்பி வைத்தார். காலையில் சத்தியராஜ் வந்ததும், "மண்டைகாய்ந்து போன' போலீசார், கடை உரிமையாளர் அப்துல் மாலிக்கை அழைத்து வந்தனர். எஸ்.ஐ., திலகவதி விசாரணை நடத்தியதில், சமரசமாக போவதாக இருவரும் கூறியதால், புகார் முடிவுக்கு வந்தது. ஒரு ரூபாய்க்காக, 12 மணி நேரம் தனி ஆளாக போராடிய கல்லூரி மாணவர் சத்தியராஜை, அங்கிருந்த போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Post a Comment

0 Comments