ஜெயலலிதா ஆட்சியின் புதிய மருத்துவ காப்பீடு - புதிய சட்டம்

* முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதிய திட்டத்தில், ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயும், குறிப்பிட்ட சில நோய்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்
படும். அதாவது, நான்கு ஆண்டுகளில், ஒரு குடும்பம் அதிகபட்சமாக, 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவை பெற இயலும்.
* முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த, 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றியமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து, புதிய காப்பீட்டு திட்டத்தில், 950 வகையான சிகிச்சை முறைகள்
அனுமதிக்கப்படும்.
* சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். மேலும், அரசு மருத்துவமனைகளின் மூலமோ, மருத்துவ முகாம்களின் மூலமோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழி செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாதவர்களுக்கு, ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், பரிசோதனைச் செலவு வழங்க வழி செய்யவில்லை.
* நோயாளிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து, ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த கட்டணங்களை பெற, முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழி செய்யவில்லை.
* அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும், முந்தைய திட்டத்தில் இடம்பெறாதது.
*அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை
தனியார் மருத்துவமனைக்கு வழங்குவது போல, அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
* புதிய காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்துக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி அல்லது சிறப்பு பகுதிகள் அமைக்கப்படும். இதனால், புதிய திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அதிகளவில் நாடி வருவதற்குரிய சூழல் உருவாகும்.
புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய திட்டம் துவங்குவதற்கு முன், இடைப்பட்ட காலத்தில், உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழி செய்யப்படும்.

Post a Comment

0 Comments