தனது பயணத்தின்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது :ஜெ உத்தரவு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினார். இரண்டரை மணி நேரம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில் அமைச்சர்கள், புதிய தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் 4 செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் பதவி ஏற்ற நாளில் அறிவிக்கப்பட்ட 7 திட்டங்களையும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் ஜெயலலிதா, பவர் பாயிண்ட் பிரசென்டேஷன் மூலம் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஒவ்வொரு துறையின் நிதி நிலைமை குறித்தும், திட்டங்களின் நிலை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கோப்புகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், துறை சார்ந்த பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும் அறிவுரைகளை வழங்கினார்.

முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார். மேலும், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட முக்கிய துறைகளான, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, எரிசக்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார் ஜெயலலிதா.

போக்குவரத்தை நிறுத்தக்கூடாது-ஜெ உத்தரவு:

இந் நிலையில் தனது பயணத்தின்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோட்டையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா வந்தபோதும், திரும்பி சென்றபோதும் போக்குவரத்து அதிகபட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments