ரூ.33 கோடிக்கு ஆசை காட்டி ஏமாற்றும் இணையதளம்


"ஒரு கையில், 17 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், மறு கையில், 33 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏ.டி.எம்., கார்டு கிடைக்கும்' என, ஆசை வார்த்தை கூறி, 17 ஆயிரம் ரூபாய் பறிக்கும் இணையதள மோசடி, தமிழகத்திலும் தடம் பதித்துள்ளது.

தமிழகத்தில், தற்போது நூதன மோசடி கும்பல், பலரையும் ஏமாற்ற துவங்கியுள்ளது. பெனின் குடியரசு நாட்டில் பணம் படைத்த பெண் ஒருவர், தம்மிடம் தேங்கி உள்ள பணத்தை ஏழைகளுக்கு (மட்டும்) வழங்க முடிவு செய்துள்ளதாகவும், "நீங்கள் ஏழையாக இருக்கும் பட்சத்தில், முழுமையான தகவல் அனுப்பி பயன் பெறலாம்' எனவும், நமக்கு முதல், "இ-மெயில்' வருகிறது. அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பியதும், நமது பெயரில் அந்நாட்டின் காப்பீடு திட்டத்தில், 33 கோடி ரூபாய்க்கு கணக்கு துவங்கியிருப்பதாக, அடுத்த மெயில் வருகிறது. உடன், அரசு அனுமதியுடன் கூடிய, காப்பீடு நிறுவன சான்றிதழும், "ஸ்கேன்' செய்து அனுப்பப்படுகிறது. நாம் புத்திசாலியாக இருந்து, தடையில்லா சான்றிதழ் கேட்கும் பட்சத்தில், அதையும் அனுப்புகின்றனர். இந்த நூதன மோசடி மீது நம்பிக்கை ஏற்பட, இதுவே முதல் அஸ்திரமாகிறது. அதன் பின், மும்பையில் இருப்பதாக கூறப்படும், "கூரியர்' நிறுவனத்தின் பெயரிலிருந்து நமக்கு மெயில் வரும். அதில், நம் பெயரில் ஏ.டி.எம்., கார்டு அடங்கிய பார்சல் வந்திருப்பதாகவும், உரிய ஆவணங்களுடன் வந்து பெறுமாறும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மோசடியாளரை நாம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கும் போது, "இதுவரை நடந்த பரிமாற்றத்திற்கான கட்டணமாக, 17 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஏ.டி.எம்., கார்டை பெறுமாறு, கூறுகின்றனர். இதற்காக மும்பை நபர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பின், என்ன நடக்கும் என்பதை, புத்திசாலிகள் யூகித்து விடுவர். இதுவரை புகாருக்கு ஆட்படாத இந்த நூதன மோசடி, தற்போது தமிழகத்தில் பரவலாக ஆக்கிரமித்துள்ளது. "குரூப் மெயில்' மூலம் நம் இ-மெயில் முகவரியை தெரிந்து கொண்டு, இந்த நூதன மோசடி துவங்குகிறது. ஆசையில், இது போன்ற மோசடிகளுக்கு நாம் செவி சாய்க்காமல் சென்றால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments