சிஸ்கோ தேர்வு எழுதி 10வயது சிறுமி சாதனை


இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.

தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.

Post a Comment

0 Comments