இலங்கை துவக்க ஆட்டக்காரர்கள் புதிய சாதனை


ஐ சி சி உலகக் கோப்பையின் ஏ பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியை இலங்கை அணி எளிதில் வென்றது.
கண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி இலங்கை அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான உபுல் தரங்கவும், திலகரத்ன தில்ஷானும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 282 ரன்களைக் குவித்தனர்.

உலகக் கோப்பை போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்கள் இந்த அளவுக்கு ரன்களை இது வரை எடுத்ததில்லை. இலங்கை அணி 282 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 133 ரன்களை எடுத்திருந்த உபுல் தரங்க ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மேலும் ஐந்து ரன்களை எடுத்திருந்தால் ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக ரன்களை எடுத்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் பெற்றிருக்க முடியும்.

இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்காவும் ஜெயசூர்யாவும் முதல் விக்கெட்டுக்கு 286 ரன்களை எடுத்திருந்தனர்.

திலகரத்ன தில்ஷான் 144 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததன் காரணமாக வலுவான துவக்கத்தை முழுமையாக இலங்கை அணியால் பயன்படுத்தக் கொள்ள முடியாமல் போயிற்று. 50 ஒவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களை எடுத்தது.

ஜிம்பாப்வே அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வேகமாக தமது ஆட்டத்தை துவக்கினர். இருந்தும் 116 ரன்களை அந்த அணி எடுத்திருந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் ரெஜிஸ் சக்காபா ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்தன. ஜிம்ப்வே அணியின் மற்ற துவக்க ஆட்டக்காரரான பிரண்டன் டெய்லர் அதிக பட்சமாக 80 ரன்களை எடுத்தார். ஜிம்பாப்வே அணி 188 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

Post a Comment

0 Comments