வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகதான் நள்ளிரவில் மின்தடை!?

அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமலில் இருக்கும் நிலையில், கோடை கால மின் உற்பத்தி குறைவால், இரவிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வருகிறது. "வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகதான் நள்ளிரவில் மின்தடை' என, கட்சிகளின் தொடர் புகார் காரணமாக, "மதுரை நகரில் மின்தடை ஏற்பட்டால், அந்த பகுதியில் பணம் பட்டுவாடா நடக்கிறதா' என கண்காணிக்க போலீசாருக்கு கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.தேர்தல் கமிஷன் நடவடிக்கையால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் கட்சிகள் தவிக்கின்றன. இருப்பினும் எப்படியாவது அவர்களை "கவனிக்க' வேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றன. தொண்டர்களை வீடு வீடாக அனுப்பி, வாக்காளர்களின் பெயர், விபரங்கள், இலவச "டிவி', காஸ் உள்ளதா, தங்கள் கட்சிக்கு ஆதரவு தருபவரா? அரசின் உயிர் காக்கும் திட்ட சலுகை பெற்றவரா, இல்லையா, திருமண உதவி, மகப்பேறு உதவித் தொகை பெற்றவரா, வெளியூர்களில் வசித்தால் அந்த முகவரி மற்றும் மொபைல் போன் எண் உட்பட 14 வகையான விபரங்களை, தேர்தல் விதிமுறைகளுக்கு மீறாக சேகரிக்கின்றனர். இதுதொடர்பாக தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து "கணக்கெடுப்பு' நடக்கிறது. இதை கண்காணிக்க, போலீசாரை நம்பாமல் எதிர்க்கட்சிகள் அந்தந்த வார்டில் சிலரை நியமித்துள்ளன. இவர்கள் கொடுக்கும் தகவல்களால்தான் தற்போது பணம் பட்டுவாடா குறித்த விபரம் தெரியவருகிறது. இந்நிலையில், தினமும் நள்ளிரவு அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை இயல்பாக மின்தடை செய்யப்படுகிறது. "இந்நேரத்தில் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்' என்று தகவல் பரவியதால், சபல வாக்காளர்கள் "காற்று' வாங்க கதவை திறந்து வைத்திருக்கின்றனர். "மின்தடையை பயன்படுத்தி பண வினியோகம்' குறித்து தொடர் புகார் வருவதால், மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். மின்தடை ஏற்பட்டவுடன், உடனடியாக நுண்ணறிவு போலீசார் அந்த பகுதிக்கு சென்று, பணம் பட்டுவாடா நடக்கிறதா என கண்காணித்து அறிக்கை தரவேண்டும் என்பதே அது. மேலும், நகரில் இரவு 12 மணிக்கு மேல் எக்காரணத்தை கொண்டும் மின்தடை ஏற்படுத்தக்கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதால், நள்ளிரவு மின்தடையால் ஏற்படும் பொதுமக்களின் புழுக்கத்திற்கு "விடிவு' ஏற்பட்டுள்ளது. "பணபுழக்கத்திற்கு' முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments