பேட்ஸ்மேன்களுக்கு தோனி அறிவுரை

பேட்ஸ்மேன்களுக்கு தோனி அறிவுரை. பார்வையாளர்களுக்காக விளையாடாமல், நாட்டுக்காக விளையாட வேண்டுமென்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கேப்டன் தோனி அறிவுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நடு, பின்வரிசை ஆட்டக்காரர்கள் மோசமாக விளையாடியதால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டமுடியவில்லை. இதனால் வெற்றியும் கை நழுவிப் போனது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கடைசி 9 விக்கெட்டுகள் வெறும் 29 ரன்களுக்குள் விழுந்தன. தோனி மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது குறித்து தோனி கூறியது : மைதானத்தில் கூடியிருக்கும் பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு பந்தையும் எல்லைக் கோட்டுக்கு வெளியே விரட்ட வேண்டுமென்று நமது பேட்ஸ்மேன்கள் விளையாடக் கூடாது. நமது அணி வெற்றி பெற வேண்டும், அதற்கான வலுவான ஸ்கோரை எட்டும் எண்ணத்தில்தான் விளையாட வேண்டும். அப்படி விளையாடி இருந்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மேலும் 40 ரன்களை நிச்சயமாக எடுத்திருக்க முடியும். பந்தை கண்ணுக்குத் தெரியாத தூரத்துக்கு விரட்ட வேண்டுமென்ற அதீத ஆர்வத்தால், அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டை இழப்பதும், 50 ஓவர்கள் கூட நின்று ஆட முடியாமல் போவதும் ஏற்புடையது அல்ல. பேட்டிங் வரிசையை மாற்றினால் பலன் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது இந்த ஆட்டத்தில் எடுபடாமல் போனது என்றார் தோனி. நெஹ்ராவை கடைசி ஓவரில் பந்து வீச அழைத்தது குறித்த கேள்விக்கு, நமது அணியில் உள்ள சிறந்த பந்து வீச்சாளர் அவர். பவர் பிளேவின்போது அவர் சிறப்பாக வீசியுள்ளார். ஆனால் இந்த ஆட்டத்தில் அவரது பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை என்றார் அவர்.

Post a Comment

0 Comments