ராயல் என்பீல்டு புல்லட்டுக்கு புதிய தொழிற்சாலை:









நாட்டின் மிகப் பழமை வாய்ந்த வாகனங்களில் ஒன்றான 'புல்லட்' மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க புதிய தொழிற்சாலை அமைக்க ஐஷர் நிறுவனத்தின் ஓர் அங்கமான ராயல் என்பீல்டு முடிவு செய்துள்ளது.வாகனங்கள் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழமும் ஐஷர் நிறுவனம், ராயல் என்பீல்டு என்ற துணை நிறுவனத்தின் கீழ் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எக்ஸ்ப்ளோரர், சில்வர்ப்ளஸ் என்ற பெயர்களில் மலிவு விலையில் பைக்கை அறிமுகம் செய்த பெருமை இந்த நிறுவனத்துக்கு உண்டு (எக்ஸ்ப்ளோரர் விலை தொன்னூறுகளில் ரூ 11 ஆயிரம் மட்டுமே!).

இப்போது இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. என்பீல்டு புல்லட் கிளாஸிக், புல்லட் 500, தண்டர்பேர்டு போன்ற அதிக சக்தி கொண்ட மூன்று பிராண்டுகளை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. விலை அதிகமென்றாலும் புல்லட் வாங்க மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையை அமைக்க ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் உள்ளது.

இதுகுறித்து ஐஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:

சென்னையில் அமைந்துள்ள தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதோடு மட்டுமின்றி, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தவிர,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியிலும் தீவிரமாக உள்ளோம். இந்த ஆண்டு உற்பத்தி திறனை 20சதவீதம் உயர்த்துவதற்காக சென்னையில் உள்ள தொழிற்சாலை நவீனப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.25கோடி செலவிடப்படும்.புல்லட்டுக்கு முன்பை விட இப்போது தேவை அதிகரித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் புல்லட் விற்பனையை கருத்தில்கொண்டு புதிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்படும்.இந்த புதிய தொழிற்சாலை தமிழகம் அல்லது ஆந்திராவில் அமைக்கப்படும். புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால், எங்களது மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை மாறும். புதிய மாடல்கள் மற்றும் 100 சிசி வாகன தயாரிப்பில் இறங்குவது குறித்து பின்னர் விவரங்கள் வெளியிடப்படும்" என்றார்.

புதிய தொழிற்சாலையின் உற்பத்தி திறன், முதலீடுகள் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 70000 புல்லட்டுகளை விற்றுள்ளது ராயல் என்பீல்ட்!

Post a Comment

0 Comments