இந்தியாவை மட்டமாக விமர்சித்த சிங்கப்பூர் - இந்திய மக்கள் கவலை

""இந்தியா ஒரு முட்டாள் நாடு; அது "ஆசியான்' அமைப்பில் பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் நிற்கிறது,'' என, சிங்கப்பூர் உயரதிகாரி ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, "விக்கிலீக்ஸ்' ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.

கடந்த 2008 மற்றும் 2009ல், சிங்கப்பூர் உயரதிகாரிகளுடன் அமெரிக்க உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிங்கப்பூர் அதிகாரிகள், "ஆசியான்' அமைப்பில் உள்ள இந்தியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை பற்றி மட்டரகமான விமர்சனங்களை கூறியுள்ளனர்."ஆசியான்' என்பது, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் இந்தியா, புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் உள்ளன.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பத்திரிகையான "பேர்பாக்ஸ் மீடியா' வெளியிட்டுள்ளதாவது: சிங்கப்பூர் தூதர் டோமி கோஹ், ஜப்பானை "கொழுப்புவற்றிப் போன நாடு. அந்த பிராந்தியத்தில் தொலைநோக்கு எதுவும் இல்லாமல், முட்டாள்தனமாக, மோசமாக தலைமை வகிக்கும் நாடு' என்றார். மேலும் அவர், "இந்தியாவும், ஜப்பானை போல ஒரு முட்டாள் நாடு தான். ஆசியான் அமைப்பில் பாதி வெளியேயும், பாதி உள்ளேயும் அந்நாடு இருக்கிறது' என்றார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் நிரந்தர செயலர் பீட்டர் ஹோ கூறுகையில், "சரியான தலைமை இல்லாதது தான் மலேசியாவின் பிரச்னை. அதனால் அது குழப்பத்தில் இருக்கிறது. இது அபாயகரமானது. அங்குள்ள இனப் பிரச்னையால், அங்கிருந்து சீனர்கள் வெளியேறி, சிங்கப்பூரில் குடியேறி வருகின்றனர். மலேசியப் பிரதமர் நஜீப் ரஜாக் ஒரு சந்தர்ப்பவாதி' என்றார். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


*******

இந்திய மக்கள் கவலை

"இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் பிரச்னையாகவும், கவலைப்படும் பிரச்னையாகவும் ஊழல் தான் உருவெடுத்துள்ளது' என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

பி.பி.சி., வேர்ல்டு சர்வீஸ் நிறுவனத்துக்காக, குளோப்ஸ்கேன் என்ற ஆய்வு நிறுவனம், இந்தியா உட்பட 26 நாடுகளில் ஒரு ஆய்வை நடத்தியது. சர்வதேச அளவில் மக்கள் அதிகம் பேசும், கவலைப்படும் பிரச்னை எது என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஊழல், சுற்றுச் சூழல், பயங்கரவாதம், பொருளாதாரம், வறுமை, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை, முக்கிய பிரச்னையாக மக்கள் முன் வைக்கப்பட்டன.

ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை ஊழல் தான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. ஊழலைப் பற்றித் தான் பெரும்பாலான மக்கள் கவலைப்படுகின்றனர். சமீபகாலமாக, இந்தியாவில் நடந்து வரும் ஊழல் பிரச்னைகள் தான் இதற்கு காரணமாக உள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட 26 நாடுகளில், 21 நாடுகளைச் சேர்ந்த மக்கள், ஊழல் பிரச்னையையே வலியுறுத்துகின்றனர். சர்வதேச அளவில் 68 சதவீதம் பேர், ஊழலைப் பற்றித்தான் கவலைப்படுகின்றனர். சர்வதேச அளவில் அதிகம் பேசப்படும் பிரச்னையாக வறுமை உள்ளது. 69 சதவீத மக்கள், உலகில் நிகழும் வறுமை பற்றி கவலைப்படுகின்றனர். சுற்றுச் சூழல் குறித்து 64 சதவீத மக்களும், பயங்கரவாதம் குறித்து 61 சதவீதம் பேரும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து 59 சதவீதம் பேரும் கவலைப்படுகின்றனர்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை பயங்கரவாதம் தான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளதாக, அந்த நாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு அடுத்தபடியாக, இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், பொருளாதார நிலை குறித்தும், ரஷ்ய மக்கள் வறுமை குறித்தும், சீன மக்கள் சுற்றுச் சூழல் நிலை குறித்தும் அதிகம் பேசுகின்றனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள மக்களை பொறுத்தவரை, சுற்றுச் சூழல் குறித்து தான், அதிகம் கவலைப்படுகின்றனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


###########

பெண்கள் இது போன்ற உடை அணிந்தால் கவனமுடன் இருக்க

Post a Comment

1 Comments

நல்ல தகவல் பதிவு அருமை வாழ்த்துகள்